சாணக்கியன் மீது முன்வைக்கப்பட்டுள்ள பகிரங்க குற்றச்சாட்டு
மட்டக்களப்பில் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை இல்லாமல் செய்யும் செயற்பாட்டினை நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன் மற்றும் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா முயற்சி செய்து வருகின்றனர் என ஈ.பி.டி.பி. கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், "மகிந்த ராஜபக்ச காலத்தில் தேசத்துக்கு மகுடம் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் கடற்றொழிலாளர்களின் வளர்ச்சிக்காக 9 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழங்கப்பட்டன.
இதில் 7 எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அவற்றின் பொருட்கள் திருடப்பட்டு செயலிழந்து மீண்டும் உருவாக்க முடியாத நிலையில் கிடக்கின்றன.
எரிபொருள் நிலையங்கள்
இந்த நிலையில் களுவங்கேணியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் மூடப்பட்டுள்ளநிலையில் இருப்பதை அறிந்து, நான் 30 இலட்சத்துக்கு மேற்பட்ட பணத்தை செலவு செய்து கடற்றொழிலாளர் சங்கத்திடம் இருந்து 5 வருட குத்தகைக்கு பெற்று அந்த எரிபொருள் நிலையத்தை மீள் இயக்கத்துக்கு கொண்டுவந்து இயக்கி வருகின்றேன்.

நான்கு ஆண்டுகள் எந்தவிதமான பிரச்சினையும் இன்றி நான் செயற்படுத்தி வந்தேன். இந்த நிலையில் இரா.சாணக்கியன் இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை அவரது பினாமிகளுக்கு எடுத்துக் கொடுக்கும் முயற்சியை கடந்த 2025ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு கட்டமாக அபிவிருத்தி குழு கூட்டங்களில் பொய் தகவல்களை கொடுத்து அரசாங்கத்தை இக்கட்டான நிலைக்கு தள்ளபார்க்கின்றார்.
அதேவேளை அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரா.சாணக்கியன் முயலை கொண்டு சென்று அதற்கு 3 கால் என்று சொன்னால் அங்குள்ள உறுப்பினர்கள் அனைவரும் 3 கால் என தெரிவிக்க கூடாது அதனை விசாரணை செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.