நிதியமைச்சு அதிகாரியின் திடீர் மரணம்! பல மாதங்களாக மறைக்கப்பட்ட டொலர் மோசடி - விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை
நிதி அமைச்சகத்திலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமல்போன சம்பவம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட நான்கு அதிகாரிகளில் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிதியமைச்சின் வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளராக செயற்பட்ட ரங்க ராஜபக்ஷ என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் (30) சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
மரணம் குறித்த உளவியல் மரண பரிசோதனை
இந்நிலையில், திறைசேரி அதிகாரியின் மரணம் குறித்து உளவியல் ரீதியான மரணப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என சட்டத்தரணி ஷிரால் லக்திலக கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிதி மோசடி குறித்து நிதி அமைச்சின் செயலாளர் 4 மாதங்களாகத் தகவல்களை மறைத்திருப்பது கடுமையான சந்தேகத்தைத் தோற்றுவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இது குறித்து ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோரிடம் உளவியல் ரீதியான மரணப் பரிசோதனையை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுப்பதாக ஷிரால் லக்திலக இதன்போது தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்கொலைகள் மற்றும் மரணங்கள் தொடர்பான வைத்திய அறிக்கைகள் குறித்த ஒரு மோசமான வரலாறு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மரணத்திற்கான காரணம்
உளவியல் ரீதியான மரணப் பரிசோதனை என்பது மூன்று விடயங்களை ஆராயும். தற்கொலைக்கான காரணம் என்ன? அவரது மனநிலை எவ்வாறு இருந்தது? அந்த மரணம் எவ்வாறு சம்பவித்தது? மரணத்திற்கு முன்னர் நடந்த சம்பவங்களை ஆராய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமல்போன சம்பவம் தொடர்பாக, இந்த அதிகாரி உட்பட நான்கு பேரின் பணிகளை இடைநீக்கம் செய்ய நிதி அமைச்சகம் சமீபத்தில் நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்நிலையில், நிதியமைச்சின் வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளராக செயற்பட்ட ரங்க ராஜபக்ஷ குளியாப்பிட்டிய பகுதியில் உள்ள அவரது வீட்டின் பின்புறப் பகுதியில், இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட பிரேதப் பரிசோதனையில் இந்த மரணம் பலத்த வெட்டுக் காயங்களினால் ஏற்பட்ட அதிகப்படியான இரத்தப்போக்கினால் நிகழ்ந்துள்ளதாகவும், அனைத்து காயங்களும் அவரே ஏற்படுத்திக்கொண்டவை என்றும், இந்த மரணம் தற்கொலையால் ஏற்பட்டது என்றும் பிரேதப் பரிசோதனைக்காக நியமிக்கப்பட்ட விசேட வைத்திய குழுவினர் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து உயிரிழந்த நிதியமைச்சு அதிகாரியின் இறுதிக்கிரியை இன்று (02.05.2026) பிற்பகல் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், திறைசேரி அதிகாரியின் மரணம் குறித்து உளவியல் ரீதியான மரணப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என சட்டத்தரணி ஷிரால் லக்திலக கோரிக்கை விடுத்துள்ளார்.