மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவை: மகிந்த தேசப்பிரிய (Photos)
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவை என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஜனநாயக இளைஞர் காங்கிரஸ் மற்றும் பீபிள்ஸ் பவுண்டேசன் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து கண்டியில் நடாத்திய செயலமர்வொன்றில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் அவசியமான மாகாணசபையை அவசியமில்லை என யாராவது குறிப்பிடுவார்களாயின் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையும் நாட்டிற்கு அவசியமில்லை.
மக்களின் கருத்துக்கள்
தற்போது மாகாண சபைகள் கூட்டிணைப்பற்ற அரச அதிகாரிகளால் செயற்படுத்தப்படுவதால், மாகாண சபை குறித்தான கேள்வியொன்றை எழுப்பும் போது அரச அதிகாரிகள் அதற்கு நேரடியாக பொறுப்பேற்காமல் இருக்கின்றனர்.
மக்கள் பிரதிநிதிகள் இருந்தால் இந்நிலை மாற்றமடைந்திருக்கும். தற்போது மாகாண சபை செயற்றிட்டங்களில் மக்கள் கருத்துக்களை கேட்டறிய வாய்ப்பு இல்லை.
எனவே மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளை தெரிவு செய்தலை உடன் மேற்கொள்ள வேண்டும். அனேகமானோர் மாகாண சபைகளை வெள்ளை யானை என தெரிவித்து வருவதுடன், மாகாணசபை உறுப்பினர்களை பராமரிக்க அதிக நிதி வீணடிக்கப்படுவதாக கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்.
ஆனால், அவர்களின் பராமரிப்புக்கு அரச வருமானத்தில் 1 வீதமளவே செலவாகுகின்றது என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ஜயலத் பண்டார மற்றும் உஸ்வெட கெய்யாவ, ஜனநாயக இளைஞர் காங்கிரசின் தலைவர் கே.அர்ஜூன, பீபிள்ஸ் பவுண்டேசன் நிறுவனத்தின் தலைவர் எரிக் ஹேரத் உள்ளிட்ட கண்டி மாவட்டத்தின் சிவிலமைப்புக்கள் உட்பட இளைஞர் யுவதிகள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





