மாகாண சபை தமிழ் மக்களுக்கு தீர்வு அல்ல! மணிவண்ணன் சுட்டிக்காட்டு
மாகாண சபை தமிழ் மக்களுக்கு தீர்வு அல்ல, சமஸ்டி தீர்வே எமது நிலைப்பாடு என்று சட்டத்தரணியும், முன்னாள் யாழ்ப்பாணம் மாநகர முதல்வரும், தமிழ் மக்கள் கூட்டணியின் துணைப் பொதுச் செயலாளருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
வடமராட்சியில் ஊடகவியலாளர்கள் மாகாண சபை தேர்தல் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்பட முடியாது. உடனடியாக நடத்தப்பட வேண்டும். 2018 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபை பதவியை இழந்திருந்தது.
மாகாண சபை தேர்தல்கள்
2017 கிழக்கு மாகாண சபை பதவியை இழந்திருந்தது கிட்ட தட்ட 6 ஆண்டுகளுக்கு மேலாக மாகாண சபை தேர்தல் நடத்தாமல் அரசாங்கங்கள் வேண்டுமென்றே இழுத்தடிப்பு செய்து வருகிறது. அவர்களைப் பொறுத்தவரையில் இந்த நாடு ஒற்றை ஆட்சிக்குள்ள இருக்க வேண்டும்.
இந்த நாட்டிலே அதிகாரம் சற்று கூட பகிரக்கூடாது. அதிலும் விசேஷமாக தமிழ் மக்கள் தங்களுடைய எந்தவொரு பிராந்தியத்தின் மீது தங்களுடைய ஆளுமையை அல்லது தங்களுடைய ஆட்சியை செயற்படுத்த கூடாது என்பதில் அவர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.

அந்த அடிப்படையில் தான் இந்த மாகாண சபை தேர்தல்கள் மாறி மாறி வந்த எல்லா அரசாங்கங்களாலும் இழுத்தடிப்பு செய்யப்படுகிறது.
2018 ஆம் ஆண்டிலேயே ஆட்சியில் இருந்தது மைத்திரிபால சிறிசேன ரணில் விக்ரமசிங்க தலைமையிலான கூட்டாட்சி. அந்த அரசாங்கம் வேண்டுமென்று செய்த சதியினாலே இந்த தேர்தல் பொறிமுறையை இல்லாமல் செய்து இன்று இந்த தேர்தல் நடைபெறாமல் இருக்கிறது.
ஆகவே என்னைப் பொறுத்தமட்டில் 13வது திருத்தச் சட்டத்தில் எதுவுமே இல்லை என்பதை நான் 100 வீதம் ஏற்றுக் கொள்கிறேன். 13-வது திருத்தச் சட்டம் எங்களுக்கு தீர்வு இல்லை என்பதையும் நான் 100 வீதம் ஏற்றுக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டார்.