இன்னும் சில மாதங்களில் மாகாண சபைத் தேர்தல்: சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்துள்ள முக்கிய ஆலோசனை
மாகாண சபைத் தேர்தல்களை நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படும் புதிய சட்டத்தின் மூலமாக மட்டுமே நடத்த முடியும் என சட்டமா அதிபர் திணைக்களம் நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளது.
மேலும், தேர்தல்கள் அறிவிக்கப்படுவதைத் தடுக்கும் சட்டச் சிக்கல்களைக் களைவதற்காக சட்ட மா அதிபரினால் நான்கு மாற்று வழிகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
விரைவில் மாகாண சபை தேர்தல்
மாகாண சபைத் தேர்தல்களுக்குப் பயன்படுத்தப்படவுள்ள தேர்தல் முறைத் தேர்வு குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் தலைவரும் அமைச்சருமான விஜித ஹேரத், தற்போதைய சட்ட நிலைமை தெளிவாகிவிட்டதால், நாடாளுமன்றத்தில் முன்வைக்கக்கூடிய சிறந்த மாற்று வழி குறித்து உடனடியாக இறுதி முடிவு எடுக்கப்படும் என்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன், சட்ட மா அதிபர் திணைக்களம் சட்ட நிலைமையைத் தெளிவுபடுத்தியுள்ளது. இப்போது, பொருத்தமான தேர்தல் முறை எது என்பதையும், அது தொடர்பான சட்டங்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு சேர்ப்பது என்பதையும் இக்குழு தீர்மானிக்க வேண்டும்.
அதன் மூலம், எங்களால் தேர்தல்களை முன்னுரிமை அடிப்படையில் அறிவிக்க முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மாகாண சபை தேர்தல் சட்டத்தின் பிரிவு 3A-(14)-இன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் எல்லை நிர்ணய மறு ஆய்வுக் குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கத் தவறியதால், மாகாண சபை தேர்தல்கள் தொடர்பாக ஒரு சட்ட நெருக்கடி எழுந்துள்ளது.
பிரிவு 3A--இன் கீழ் தேவையான நடைமுறை முடிக்கப்படாததால், தற்போதுள்ள 2017 திருத்தத்தை முழுமையாகச் செயல்படுத்த முடியாது.
அதன் விளைவாக, மறுஆய்வுக் குழுவின் சட்டப்பூர்வ அதிகாரங்கள் திறம்பட முடிவுக்கு வந்துவிட்டன. எனவே, இந்தப் பிரச்சினையை நிர்வாக நடவடிக்கை மூலமாகவோ அல்லது சட்டத்தின் எளிய விளக்கம் மூலமாகவோ தீர்க்க முடியாது.
மேலும் நாடாளுமன்றத்தில் ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றுவதே ஒரே சட்டப்பூர்வ தீர்வு என்றும் சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நான்கு மாற்றுத் தெரிவுகள்
தற்போதுள்ள சட்டத் தடைகளைச் சமாளிக்க, நாடாளுமன்ற விசேட குழு பரிசீலிப்பதற்காக சட்ட மா அதிபர் திணைக்களம் நான்கு மாற்றுத் தெரிவுகளை முன்வைத்துள்ளது.
இதன்படி,
01. 2017ஆம் ஆண்டின் மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டம் எண் 17-ஐ ரத்து செய்து, 1988 சட்டத்தின் கீழ் இருந்த பழைய தேர்தல் முறைக்கு மீண்டும் திரும்புதல்.

02. 2017 ஆம் ஆண்டு திருத்தத்தைப் பொருட்படுத்தாமல், வரவிருக்கும் காலத்திற்கு பழைய தேர்தல் சட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல்.
03. 2017 ஆம் ஆண்டு திருத்தத்தை முழுமையாக ரத்து செய்து, தேவைப்பட்டால், பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்திற்கான விதிகளை உள்ளடக்கிய ஒரு புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்துதல்.
04. தற்போதுள்ள சட்டத்தைத் திருத்தி, பிரிவு 3A-இன் கீழ் ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைச் செல்லுபடியாக்குதல் மற்றும் தொகுதி மறுவரையறை செயல்முறையை அடுத்த கட்டத்திலிருந்து மீண்டும் தொடங்குதல்.
பதவிக்காலம் நீடிக்க முடிவு
2017 ஆம் ஆண்டு திருத்தம் முழுமையாக ரத்து செய்யப்பட்டால், அந்தத் திருத்தத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட அதிகரித்த பெண்கள் பிரதிநிதித்துவம் இழக்கப்படக்கூடும் என்றும், எனவே சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், நாடாளுமன்றம் தீர்மானித்தால், இளைஞர் பிரதிநிதித்துவத்தையும் அதில் சேர்க்கலாம். இருப்பினும், பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை ஒரு சாதாரண நாடாளுமன்ற மசோதாவின் மூலம் அறிமுகப்படுத்த முடியாது என்றும், இதற்கு ஒரு முறையான திருத்தம் அல்லது ஒரு புதிய நாடாளுமன்றச் சட்டம் தேவை என்றும் சட்டமா அதிபர் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
ஜூன் 3ஆம் திகதியுடன் பதவிக்காலம் முடிவடைந்த நாடாளுமன்ற விசேட குழு, தனது பணிகளை நிறைவு செய்வதற்காக ஜூன் 10ஆம் திகதி கூடும்போது அதன் பதவிக்காலத்தை நீட்டிக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கு 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் போதுமான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த கடையை கொண்டுபோய் சுடுகாடு பக்கத்துல வைங்க.. CM விஜய்க்கு நடிகர் பார்த்திபன் கொடுத்த ஐடியா Cineulagam