மாகாண சபைத் தேர்தலை நடத்தும் உத்தேசம் அரசாங்கத்துக்கு இல்லை! அகில விராஜ் குற்றச்சாட்டு
மாகாண சபைத்தேர்தலை நடத்தும் உத்தேசம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு இல்லை என்று ஐ.தே.க. உபதலைவர் அகில விராஜ் காரியவசம் குற்றம் சாட்டியுள்ளார்.
மாகாணசபை தேர்தலை இந்த வருடம் நடத்த முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா யாழ்ப்பாணத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.
அது தொடர்பான ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையில் அகில விராஜ் காரியவசம் மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தல்
அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
மாகாணசபை தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே டில்வின் சில்வா தெரிவித்திருக்கிறார். அதனால் மாகாண சபை தேர்தலை அரசாங்கம் ஒருபோதும் நடத்தப்போவதில்லை என்பது உறுதியாகின்றது.
முன்னைய அரசாங்கங்களின் ஆட்சிக் காலங்களில், தேர்தல்கள் உரிய காலத்தில் நடக்காமல் இருந்தால், அது தொடர்பில் பெரும் எதிர்ப்புக்குரல் எழுப்பியவர்கள் மக்கள் விடுதலை முன்னணியாகும்.

அதேநேரம் அனைத்து தேர்தல்களையும் படிப்படியாக நடத்துவோம் என்றே இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தெரிவித்தார்கள். ஏனெனில் அப்போது அரசாங்கத்துக்கு பாரிய மக்கள் செல்வாக்கு இருந்தது.
ஆரம்ப கட்டமாக உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தினார்கள். ஆனால் அந்த தேர்தலில் அரசாங்கத்துக்கு பின்னடைவு ஏற்பட்டது. அதனால் அரசாங்கம் மாகாணசபை தேர்தலுக்கு உடனே செல்லப்போவதில்லை என்பது யாவரும் அறிந்த விடயம்.
மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்தவேண்டும் என்ற தேவை அரசாங்கத்துக்கு இருக்குமாக இருந்தால், மாகாணசபை தேர்தல் தொடர்பில் அரசாங்கத்துக்கு சட்ட திருத்தம் கொண்டுவந்து, தேர்தலை நடத்தலாம். அதற்கான பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு இருக்கிறது.
ஆனால் அரசாங்கம் அதனை செய்யாமல் தற்போது இதுதொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைத்திருக்கிறது. இது எந்தளவு சாத்தியமாகும் என தெரியாது.

அதேநேரம் அரசாங்கம் இந்தமுறை வரவு செலவு திட்டத்தில் மாகாணசபை தேர்தலடி நடத்துவதற்காக ஒதுக்கிய நிதியை டித்வா புயல் அனர்த்த பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒதுக்கியுள்ளதாகவும் டில்வான் சில்வா கூறியுள்ளார்.
ஆனால் இரண்டுக்கும் தனித்தனியாக நாடாளுமன்றத்தில் நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் மாகாணசபை தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை டித்வா புயல் அனர்த்த நிவாரணத்துக்கு ஒதுக்கியதாக தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு தெரிவிப்பதற்கு டில்வின் சில்வாவுக்கு எந்த உரிமையும் இல்லை. ஏனெனில் அவர் இந்த அரசாங்கத்தில் எந்த பதவியிலும் இல்லை.
எவ்வாறு இருந்தாலும் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான எண்ணம் அரசாங்கத்திடம் இல்லை. காலத்தை கடத்துவதற்கே ஒருசில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசாங்கம் அடுத்த வருடமும் தேர்தலை நடத்தும் என்ற நம்பிக்கை இல்லை. அதனால் மாகாணசபை தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே தற்போது டில்வின் சில்வா தெரிவித்திருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.