வரவு - செலவுத்திட்டத்திற்கு எதிராக களமிறங்கும் தொழிற்சங்கங்கள்! தொடர் போராட்டங்கள் வெடிக்கும் அபாயம்
2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் தமது துறைகளுக்கான மேலதிக கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவில்லை என்றும், முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டி நாட்டின் பல்வேறு துறைசார் தொழிற்சங்கத்தினர் இவ்வாரம் தொடர் தொழிற்சங்கப் போராட்டங்களில் ஈடுபடவுள்ளனர்.
கால்நடை வைத்தியர்கள், மின்சார ஊழியர்கள், அரச சேவை மற்றும் பல்கலைக்கழகத் தொழிற்சங்கத்தினர் இந்தப் போராட்டங்களில் களமிறங்குகின்றனர்.
தொழிற்சங்க போராட்டங்கள்
வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகளில் தமது துறை முற்றாகப் புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாளை செவ்வாய்க்கிழமை சுகயீன விடுமுறையை அறிவித்துத் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இது குறித்து அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரஞ்சித் தெரிவிக்கையில்,
"நிதி அமைச்சரான ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டுள்ள 2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் கால்நடை வைத்தியர்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் எதற்கும் தீர்வு முன்வைக்கப்படவில்லை.
விவசாயத்துறை, கால்நடை அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கே.டி.லால்காந்தவிடம் கலந்துரையாடிப் பல கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் பயன் கிடைக்கவில்லை.
நாளை சுகயீன விடுமுறையை அறிவித்துப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். கோரிக்கைகளுக்கு அரசு தீர்வளிக்காவிடின் 2027ஆம் ஆண்டுக்கான எவ்வித அபிவிருத்தித் திட்ட நடவடிக்கைகளிலும் பங்குபற்றப் போவதில்லை. அதேபோல் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மற்றும் அரசியல் தலையீடுகளுடனான கூட்டங்களிலும் பங்குபற்றப் போவதில்லை என்றார்.
மின்சார புதிய சேவை சங்கத்தின் தலைவர் ஜகத் விதானகே
"வரவு - செலவுத் திட்டத்தில் மின்சாரத் துறைக்கும், மின்பயனாளர்களுக்கும் எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை. மின்னுற்பத்திக்கான மின்கல (பெற்றரி) இறக்குமதியாளர்களுக்கு மாத்திரம் வரி விலக்களிக்கப்பட்டுள்ளது.
மின்கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்ட போதிலும், தற்போது மின்கட்டணம் பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த வாரம் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்று மின்சார புதிய சேவை சங்கத்தின் தலைவர் ஜகத் விதானகே தெரிவித்துள்ளார்.
இலங்கை அரச சேவை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுனில் கொடிகார
"அரச சேவையில் தெரிவு செய்யப்பட்ட 5 சதவீதமானோருக்கு மாத்திரமே மேலதிக கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், 95 சதவீதமானோருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த ஒருதலைப்பட்சமான செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த வாரம் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று இலங்கை அரச சேவை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுனில் கொடிகார தெரிவித்துள்ளார்.
அனைத்து பல்கலைக்கழகச் சேவைத் தொழிற்சங்கத்தின் தலைவர் ரங்க மீகொட
"பல்கலைக்கழகச் சேவைக் கட்டமைப்பில் கள உத்தியோகத்தர்களின் மேலதிக கொடுப்பனவு அதிகரிக்கப்படவில்லை. எமக்கும் மேலதிக கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும். இல்லையேல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று அனைத்து பல்கலைக்கழகச் சேவைத் தொழிற்சங்கத்தின் தலைவர் ரங்க மீகொட குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வரவு - செலவுத் திட்டத்தில் தமக்கான கொடுப்பனவு எதுவும் அதிகரிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டி முன்பள்ளி ஆசிரியர்கள் பொலன்னறுவை நகரில் நேற்று அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சம்பளத்தையோ அல்லது மேலதிக கொடுப்பனவையோ அதிகரிக்காவிடின் பரவாயில்லை. வாழ்க்கைச் செலவுகளையேனும் குறைக்க வேண்டும்.
ஆனால், இந்த வரவு - செலவுத் திட்டத்தில் வாழ்க்கைச் செலவுகள் எதுவும் குறைவடையவில்லை என்றும் இதன்போது குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வங்காள விரிகுடாவில் உருவாகவுள்ள புயல்! அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை