கரன்னாகொடவை விடுவிக்க முயற்சி: எதிர்ப்பு தெரிவித்துள்ள காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள்
இலங்கையின் கடற்படை அதிகாரிகள் குழுவினால் 11 இளைஞர்கள் காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணையிலிருந்து முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவை (Wasantha Karannagoda) விடுவிக்கும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டமானது, புதுக்கடை (Puthukkadai) மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக நேற்று (30.05.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னாகொடவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதி நீதிமன்றில் நடைபெறவுள்ளது.
ரிட் விண்ணப்பம்
கடந்த 2008 - 2009ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்களை கைது செய்து சித்திரவதை, கப்பம் கோருதல், கடத்தல் மற்றும் கொலை செய்ய சதி செய்தமை ஆகிய குற்றச்சாட்டில் கரன்னாகொட உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக 2019ஆம் ஆண்டு சட்டமா அதிபர் 667 குற்றப்பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்தார்.
குற்றத்தின் தீவிரம் காரணமாக, வழக்கை விசாரணை செய்ய மூன்று நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய சிறப்பு ட்ரயல் - அட் - பார் அமைக்கப்பட்டது.
எனினும், 2020 மார்ச் மாதத்தில், முன்னாள் கடற்படைத் தளபதி ஒரு ரிட் விண்ணப்பத்தை தாக்கல் செய்தார்.
குறித்த மனுவில், தமக்கு எதிரான மனு விசாரிக்கப்பட்டு குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படும் வரை தமக்கும் மற்றவர்களுக்கும் எதிரான விசாரணையை இடைநிறுத்துவதற்கு இடைக்காலத் தடை வேண்டும் என கோரியிருந்தார்.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இந்நிலையில், முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிரான குற்றச்சாட்டை சட்டமா அதிபர், திரும்பப்பெற முயற்சிப்பதாக, காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ குற்றம் சுமத்தியுள்ளார்.
அதேவேளை, "குற்றம் சாட்டப்பட்டவர்களை, அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும், அன்புக்குரியவர்களுக்கும் செய்தது போல் நடத்த வேண்டும் என்று தாம் கோரவில்லை இந்த வழக்கில் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே கோருகின்றோம்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இளைஞர்களுக்கு நீதி கோரி எதிர்வரும் ஜூன் 3ஆம் திகதியும் மனித உரிமைகள் அமைப்பு போராட்டத்தை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |