திருகோணமலை பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு போராட்டம் (Video)
திருகோணமலை - இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இன்று (03.09.2023) காலை திருகோணமலை - சாம்பல்தீவு பாலத்திற்கு அருகில் குறித்த போராட்டம் நடைபெற்றது.
“பௌத்தர்கள் இல்லாத இடத்தில் பௌத்த விகாரை எதற்கு?”, “பெரியகுளம் விகாரை கட்டுமானத்தை உடனடியாக நிறுத்து”, “தொல்லியல் திணைக்களம் பௌத்தத்திற்கு மட்டுமா?”, “தொல்லியல் திணைக்களமே இனவாதத்தை தூண்டாதே” என்ற வாசகங்களை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நீதிவான் நிதிமன்றினால் தடை உத்தரவு
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்னம்பலம் கஜேந்திரகுமார், செ.கஜேந்திரன் மற்றும் தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தை தடுக்கும் முகமாக திருகோணமலை – நிலாவெளி பொலிஸாரினால்
மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் திருகோணமலை நீதிவான்
நிதிமன்றினால் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்கு 14 பேருக்கு எதிராக
தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
குறித்த தடை உத்தரவானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் இளைஞர் அணித் தலைவர் கிருஷ்ணபிள்ளை பிரசாத், தமிழ்ப் பேரவையின் தலைவர் ஆர்.ஜெரோம், செயலாளர் ரமேஸ் நிக்லஸ், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், குச்சசெளி முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பொன்னையா வைத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட மற்றைய தரப்பாக பௌத்த பிக்குகள் உட்பட 7 பேருக்கும் எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்தது.
நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நிலாவெளி பொலிஸாரினால் குறித்த தடை உத்தரவு வாசித்துக்காட்டியதையடுத்து திருகோணமலை - நிலாவெளி வீதியின் சாம்பல்தீவு சந்திப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சாம்பல்தீவு பாலத்திற்கு அப்பால் சென்று தமது எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்தார்கள்.
இன வன்முறைக்கும் வித்திடும்
திருகோணமலை - இலுப்பைக்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அண்ணளவாக 540 குடும்பங்களைச் சேர்ந்த 2202 தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அத்துடன் இதனைச் சூழவுள்ள பெரியகுளம், ஆத்திமோட்டை, சாம்பல்தீவு மற்றும் சல்லி போன்ற கிராமங்களில் தமிழர்கள் மட்டுமே காலாகாலமாக வாழ்ந்து வருகின்றார்கள்.
சிங்கள பௌத்தர்கள் இல்லாத இப்பிரதேசத்தில் பௌத்த விகாரை நிறுவப்படுமானால் அது மூவின மக்களினதும் ஒற்றுமையை சீர்குலைத்து இன வன்முறைக்கும் வித்திடும் என மக்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றார்கள்.
இதேவேளை குறித்த இடத்தில் பௌத்த விகாரை அமைக்க கிழக்கு ஆளுநரினால் தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்தமாதம் 12ம் திகதி பெரியகுள சந்திப் பகுதியிலும் 28ம் திகதி மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஏ6 வீதியை மறித்தும் பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததோடு அன்று கச்சேரியில் இடம்பெற்றுக் கொண்டிருந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலும் புகுந்து சில பௌத்த பிக்குகள் குழப்ப நிலையை விளைவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
மேலதிக தகவல் : குமார்





தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam
