பங்களாதேஷில் இந்து சமூகத்தினரினால் மீண்டும் வெடித்த பாரிய போராட்டம்
பங்களாதேஷின் சிறுபான்மை இந்து சமூகம் , மாணவர் இயக்கங்கள் என்ற போர்வையில் தங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
7 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் திரண்ட போராட்டத்தால் தலைநகர் டாக்கா உட்பட பல பகுதிகளில் வீதிகள் மூடப்பட்டது.
காபந்து அரசாங்கம்
காலாவதியான வேலை ஒதுக்கீட்டு முறையை மீண்டும் அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சியுடன் பங்களாதேஷில் மாணவர் போராட்டங்கள் தொடங்கியது. போராட்டங்கள் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறை காரணமாக, போராட்டங்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களாக மாறியது, இது பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இழப்பதில் முடிந்தது.
பின்னர் அவர் நாட்டை விட்டு வெளியேறினார், மேலும் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற முஹம்மது யூனுஸ் தலைமையிலான ஒரு காபந்து அரசாங்கம் மாணவர் ஆர்வலர்களின் தலையீட்டுடன் நியமிக்கப்பட்டது.
இருபது முதல் முப்பத்தேழு வயது வரையிலான மாணவர் இயக்கத்தின் இரண்டு தலைவர்கள் அரசாங்கப் பிரதிநிதிகளில் உள்ளனர். நாட்டின் நாடாளுமன்றத்தைக் கூட கைப்பற்றிய போராட்டக்காரர்கள் இப்போது நாட்டின் விவகாரங்களைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.
தலைமை நீதிபதி உட்பட அனைத்து நீதிபதிகளும் ஒரு மணி நேரத்திற்குள் பதவி விலக வேண்டும் என்று கோரி மாணவர் ஆர்வலர்கள் நேற்று நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.
அங்கு, முன்னாள் பிரதமருக்கு எதிராக பாரபட்சமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன், ஏனைய 5 உச்ச நீதிமன்ற நீதிபதிகளுடன் உடனடியாக தனது பதவி விலகல் செய்தார்.
பதவி விலகல்
இருப்பினும், இழிவான வேலை ஒதுக்கீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த ஹசீனா அரசின் முயற்சி சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது மற்றும் மோதல்களைக் கொஞ்சம் குறைக்க தலையிட்டது.
இதேவேளை, பங்களாதேஷ் மத்திய வங்கியின் தலைவரும் நேற்று (12) பதவி விலகக் கோரி வங்கி அதிகாரிகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து அவர் பதவி விலகியுள்ளார்.
இத்தகைய பின்னணியில், மாணவர் போராட்டம் என்ற போர்வையில் பங்களாதேஷின் சிறுபான்மை இந்து சமூகத்தை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்ட சம்பவங்களும் நாட்டில் பதிவாகியுள்ளன.
ஆகஸ்ட் 5 ஆம் திகதி ஹசீனாவின் அரசாங்கம் கவிழ்ந்த சில நாட்களில், நாட்டின் 52 மாவட்டங்களில் இந்து சமூகத்தை குறிவைத்து 200 க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்தத் தாக்குதல்களில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளக் கோரி, தலைநகர் டாக்கா உட்பட பல பகுதிகளில் சிறுபான்மை இந்து சமூகத்தினர் மாபெரும் போராட்டங்களை நடத்தினர்.
இட ஒதுக்கீடு
சிறுபான்மையினரைத் துன்புறுத்துபவர்களின் விசாரணையை விரைவுபடுத்த சிறப்பு நீதிமன்றம் மற்றும் சிறுபான்மையினருக்கு நாடாளுமன்றத்தில் 10 சதவீத இட ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட போராட்டங்களால் டாக்காவில் விதிகள் கூட மூடப்பட்டன.
இந்த போராட்டங்களில் 700,000 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாகவும், இதற்கு சில மாணவர் ஆர்வலர்களும் ஆதரவு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
பங்களாதேஷின் 170 மில்லியன் மக்கள்தொகையில் 8 சதவீதம் இந்துக்கள் உள்ளனர், அரசியல் விமர்சகர்களின் கூற்றுப்படி, அவர்களின் பெரும்பாலான ஆதரவு ஷேக் ஹசீனாவின் அவாமி லீக்கிற்கு உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |