அமெரிக்காவிற்கு எதிராக கொழும்பில் போராட்டம்!
அமெரிக்காவின் செயற்பாடுகளை கண்டித்து கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வெனிசுலா மீது அமெரிக்காவின் நடவடிக்கைகள் மற்றும் தாக்குதல்களுக்கு எதிராக கொல்லுபிட்டி பகுதியில் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்த உள்ளதாக மக்கள் போராட்ட முன்னணி தெரிவித்துள்ளது.
முற்போக்கு இடதுசாரி கட்சிகள் மற்றும் பல சிவில் அமைப்புகளின் ஒருங்கிணைந்த முயற்சியுடன் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அந்த அமைப்பின் நிர்வாக உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.

தற்போதைய இலங்கை அரசு அமெரிக்காவின் விருப்பங்களை பின்பற்றி செயல்பட்டு வருவது, மற்றும் மிகவும் பலவீனமான மற்றும் அமைதியான அணுகுமுறையைக் கடைபிடித்துவருவது கவலையளிப்பதாக துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி இந்த நெருக்கடியான தருணத்தில் வெறுமனே ஓரு ஊடக அறிக்கையை மட்டும் வெளியிட்டு தன்னை மட்டுப்படுத்திக் கொண்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
போர்த்துகேய மற்றும் ஒல்லாந்தர் ஆட்சிகளில் நாட்டை ஆட்சி செய்தவர்கள் எவ்வாறான அடிமைப் போக்கினை பின்பற்றினார்களோ அதே கொள்கைகளை தற்போதைய அரசாங்கம் பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்கத் தூதரகம் அமைந்துள்ள கொள்ளுப்பிட்டி பகுதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.