இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி வடக்கில் போராட்டம்
நீண்ட காலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்டமானது இன்றையதினம் (26.07.2025) முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
வடக்கு - கிழக்கு
வடகிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருந்த நிலையில் வடக்கு, கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவில் மாவட்ட செயலகம் முன்பாக இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
குறித்த போராட்டம், நீண்ட காலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை தபிசாளர் லோகேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஜுட்சன், வடக்கு, கிழக்கு சமூக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்புமணி லவகுசராசா, கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கத்தின் உறுப்பினர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா
ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு சர்வதேச நீதிப் பொறிமுறை வேண்டும் என்பதை வலியுறுத்தி வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் இன்றைய தினம் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அந்தவகையில் வவுனியா புதிய பேருந்து நிலையப்பகுதிக்கு முன்பாகவும் குறித்த போராட்டம் இடம்பெற்றது.
வடக்கு - கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்போராட்டமானது, இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எடுக்கப்படும் இலங்கை தொடர்பான தீர்மானத்தை வலுப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படுவதாக ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
செய்தி - கபில்
















