அலரி மாளிகை நடைபாதை விவகாரம்: நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவு
இரண்டாம் இணைப்பு
அலரி மாளிகை எதிரில் நடக்கும் போராட்டம் மற்றும் நடைப்பாதையில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகள் சம்பந்தமாக எதிர்வரும் 9 ஆம் திகதி நடக்கும் வழக்கு விசாரணைகளில் தீர்ப்பு வரும் வரை ஏற்கனவே அமைதியாக போராட்டம் நடத்தியது போல், தொடர்ந்தும் அமைதியாக போராட்டத்தை முன்னெடுக்குமாறு சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அந்த சட்டத்தரணி, நீதிமன்ற தற்போது வழங்கியுள்ள உத்தரவு தொடர்பாக நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து விளக்கத்தை முன்வைத்தோம். பொலிஸார் அவசர தேவை எனக் கூறியே இந்த உத்தரவை பெற்றுக்கொண்டது.
48 மணி நேரத்திற்குள் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. தொடர்ந்தும் பொலிஸார் அதனை மேற்கொள்ள அவசியமில்லை என்பதால், உத்தரவை இடைநிறுத்துமாறு நீதிமன்றத்திடம் கோரினோம்.
நீதவான் எமது கோரிக்கையை செவிமடுத்து, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் சட்டமா அதிபருக்கும் எதிர்வரும் 9 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு அறிவிப்பணை விடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
முன்னர் வழங்கி உத்தரவை இடைநிறுத்தவில்லை என்பதை தெளிவாக கூறவேண்டும். உத்தரவை நடைமுறைப்படுத்தாத காரணம் குறித்து விளக்கமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொலிஸார் இதுவரை நடைமுறைப்படுத்தாத உத்தரவை தற்போது நடைமுறைப்படுத்தாது என்ற எதிர்பார்ப்பு சாதாரண பிரஜைகள் என்ற முறையில் எமக்கு உள்ளது.
அத்துடன் அமைதியாக வீதியில் நெரிச்சல் ஏற்படாத வகையில் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு போராட்டகாரர்களுக்கும் இருக்கின்றது.
அமைதியான முறையில் போராடுங்கள். எதிர்வரும் 9 ஆம் திகதி நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கும் போது நியாயமான தீர்ப்பை வழங்கும். நீதிமன்றம் 2 ஆம் திகதி வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தினால், நடைப்பாதையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களையும் அப்புறப்படுத்த வேண்டும்.
அதேபோல் நாம் அமைத்துள்ள கூடாரங்கள் காரணமாக வீதிக்கு இடையூறு ஏற்படுமாயின் நாமும் அவற்றை அகற்றிக்கொள்ள வேண்டும். நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதால், பொலிஸாரும் நீதிமன்ற உத்தரவை கவனத்தில் கொண்டு நியாயமாக செயற்பாடுவார்கள் என நினைக்கின்றோம்.
நீங்கள் முற்றாக அமைதியான முறையில் வீதி போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு தடையேற்படாத வகையில் வீதியோரத்தில் அமைதியாக எதிர்ப்பை முன்னெடுங்கள். நீங்கள் பல நாட்களாக அமைதியாக போராட்டத்தை நடத்தி வருகிறீர்கள்.
அதனால், எந்த பிரச்சினையும் இல்லை, எமக்கு ஒழுக்கம் இருக்கின்றது. கொள்ளை சம்பவங்கள் நடக்க ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறினார்.
நாம் கட்டுப்பாட்டுடன் ஒழுக்கமான முறையில் முன்னெடுத்துச் செல்வோம். நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க உள்ள இளைஞர்கள் என்ற வகையில் எம்மால் இதனை செய்ய முடியும். இதனால், அமைதியான முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் எனக் கூறியுள்ளார்.
முதலாம் இணைப்பு
அலரி மாளிகைக்கு எதிரில் நடைபாதையில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகள் மற்றும் போராட்டகார்கள் அமைத்துள்ள சட்டவிரோத கூடாரங்களை அப்புறப்படுத்துமாறு வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தாது சம்பந்தமாக எதிர்வரும் 9 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலையாகி விளக்கத்தை முன்வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகரி மற்றும் சட்டமா அதிபருக்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த விடயம் சம்பந்தமாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் செய்திருந்த முறைப்பாடு தொடர்பாக இரண்டு பிரதிவாதிகள் செய்த முறைப்பாட்டை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.



