திருகோணமலையில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்
திருகோணமலை - முத்துநகர் பகுதியில் வெளிநாட்டு, உள்நாட்டு நிறுவனங்களுக்கு மக்கள் காணிகளை துறைமுக அதிகார சபையினர் அபகரிப்பு செய்ய விடக் கூடாது என மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது, இன்று (16.08.2024) பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்துநகர் பகுதி மக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, 'இந்தியாவிற்கு காணிகளை விற்காதே', 'எங்கள் நிலம் எங்களுக்கு' போன்ற வாசகங்களை ஏந்தி முத்துநகரில் அப்பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கப்பல் துறை, முத்துநகர் போன்ற பகுதியில் மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
மின்சார காற்றாலை உற்பத்தி
இக்காணிகள் இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமானது என்றும் அதனை வெளிநாடுகளுக்கு தாரைவார்க்க வேண்டாம் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இருப்பினும், அப்பகுதியில் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க முடியாது என திருகோணமலை நீதிமன்றால் தடை விதிக்கப்பட்டுள்ளது என சீனக்குடா பொலிஸார் நால்வர் அடங்கிய பெயரை குறித்து தடை உத்தரவு வழங்கியுள்ளதாக அந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ராசிக் றியாஸ்தீன் தெரிவித்தார்.
மேலும், முத்துநகர் மற்றும் கப்பல்துறை பகுதிகளில் 1972ஆம் ஆண்டு பிரதமராக செயற்பட்ட ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவால் மக்கள் குடியேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், விவசாயத்தை நம்பி வாழும் மக்களை தற்போது மீள் எழுப்பி இந்தியாவுக்கு மின்சார காற்றாலை உற்பத்திக்கு நீண்டகால குத்தகைக்கு வழங்குவது மக்களை நசுக்கும் செயலாகும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாவட்ட அமைப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
You may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |