ரணிலின் நாடகத்தை தமிழ் மக்கள் நம்ப மாட்டார்கள்: தேசிய மக்கள் சக்தி விசனம்
தமிழ் மக்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரத்தை ஆட்சிக்கு வந்தபின் பெற்று தருவதாக கூறும் ரணில் விக்ரமசிங்கவின் நாடகத்தை தமிழ் மக்கள் நம்ப மாட்டார்கள் என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் அவரது கட்சி அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
. அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போது ஜனாதிபதி தேர்தலில் 22 அரசியல் கட்சிகள் மற்றும் 17 சுயேச்சைக் குழு வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
சுயேச்சை குழு
அனேகமாக சுயேச்சை குழு வேட்பாளராக களம் இறங்கியவர்கள் ரணில் விக்ரமசிங்கவின் நிகழ்ச்சி நிரலில் களமிறங்கியவர்கள். தேசிய மக்கள் சக்தி தமிழ் சிங்கள முஸ்லிம் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்துவதற்காக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரவுக்கு அனைவருடைய ஆதரவும் பெருகிவரும் நிலையில் அதனை சகித்துக் கொள்ள முடியாத ஏனைய கட்சிகள் பொய் பிரசாரங்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன.
இவ்வாறான ஒரு நிலையில் ரணில் விக்கிரமசிங்க தமிழ் கட்சிகளை சந்தித்து பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவது தொடர்பில் தான் கரிசனையாக உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
ரணில் விக்ரமசிங்க
ரணில் விக்ரமசிங்க 41 வருட காலமாக நாடாளுமன்றத்தில் உள்ள நிலையில் ஆறு தடவைக்கு மேலாக எதிர்க்கட்சி தலைவராகவும் பிரதமர் மற்றும் தற்போது ஜனாதிபதியாக உள்ளார்.
தமிழ் மக்களுக்கு காணி போலீஸ அதிகாரத்தை வழங்க வேண்டுமானால் தனது விசேட அதிகாரத்தை பயன்படுத்தி வழங்கியிருக்க முடியும் ஏன் மீண்டும் ஜனாதிபதி ஆகிய பின்னர் வழங்கப் போவதாக கூறுகிறார்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |