அனைத்து அறவழி போராட்டகாரர்களையும் உடனடியாக விடுதலை செய்ய கோரி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்(Photos)
பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய கோரியும், இலங்கையில் இடம்பெற்ற ஜனநாயக போராட்டங்களில் கலந்துக்கொண்ட போராட்டகாரர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரியும் மன்னார் பஸார் பகுதியில் இன்று(21) அடையாள கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்த போராட்டம் வடக்கு -கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஒருங்கமைப்பில் இடம்பெற்றுள்ளது.
கோரிக்கைகள்
குறித்த போராட்டத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட தரப்பு தமிழர் என்ற வகையில் பயங்கரவாத தடை சட்டத்தை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும்.
ஜனநாயக அறவழி போராட்டத்தில் கலந்துக்கொண்டமைக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் மாணவ செயற்பாட்டாளர்களையும், இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
மாணவ செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்ககூடாது எனவும் போராட்டகாரர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
ஜனாதிபதிக்கு மனு
இந்த போராட்டத்தில் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழு அங்கத்தவர்கள் வவுனியா,கிளிநொச்சி,முல்லைதீவு,மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பொது மக்கள் பெண்கள் குழுக்கள்,சமூக செயற்பாட்டாளர்கள் மன்னார் மெசிடோ நிறுவன அதிகாரிகள்,பாதிக்கப்பட்டவர்களுக்கான இணையத்தின் ஊழியர்கள் என பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கையளிப்பதற்கு என தயாரிக்கப்பட்ட பொது மனுவும் போராட்டத்தின் போது வாசிக்கப்படமை குறிப்பிடதக்கது.
பணிப்பாளர் யாட்சனின் உரை
சுமார் 30 வருடங்களுக்கு மேல் வெளிச்சத்தையே காணாமல் எமது உறவுகள் இறந்துள்ளனர்.ஆகவே அதனை அனுபவித்தவர்கள் சிறுபான்மையின மக்கள் என்ற வகையில்,நாங்கள் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட்டு,அமைதியான போராட்டக்காரர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒரு செய்தியை கூற விரும்புகின்றோம். உங்களால் இந்த நாட்டு மக்களுக்கு ஓர் நல்ல விடயம் ஒன்றை நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இந்த இடத்தில் ஒன்று கூடியுள்ளோம்.
பல்கலைக்கழக மாணவ செயற்பாட்டாளர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் உள்வாங்கப்படுவதை உடன் நிறுத்துமாறு மக்களின் குரலாக முன்வைக்கின்றோம்.
கடந்த 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டவர்களை,பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை செய்வதற்கான செயல் திட்டங்களை முன்னெடுப்பதாக நாங்கள் அறிகிறோம்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனநாயக ரீதியில் போராடுவதற்கும்,கருத்து தெரிவிப்பதற்கு,இந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக உரிமை உள்ளது என்பதை நாங்கள் முன்வைத்தவர்களாக , அவர்களின் அமைதியான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை உடன் விடுவிக்குமாறு தமிழ், மக்களாகிய நாங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பல்வேறு இன்னல்,துன்பங்களை அனுபவித்துள்ளோம்.
சிறுபான்மை மக்களின் அனுபவம்
சுமார் 30 வருடங்களுக்கு மேல் வெளிச்சத்தையே காணாமல் எமது உறவுகள் இறந்துள்ளனர்.
ஆகவே அதனை அனுபவித்தவர்கள் சிறுபான்மையின மக்கள் என்ற வகையில்,நாங்கள் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட்டு,அமைதியான போராட்டக்காரர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
சர்வதேச மன்னிப்புச் சபையும் இவ்விடயம் தொடர்பாக இலங்கை அரசை கோர வேண்டும்.”என தெரிவித்துள்ளார்.
மேலதிக செய்தி-ஆஷிக்