ஜனாஸா எரிப்புக்கு எதிராக கிண்ணியாவில் கவன் சீலைப் போராட்டம் முன்னெடுப்பு
ஜனாஸாக்களை தகனம் செய்யாது நல்லடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கோரி கொட்டும் மழையில் கிண்ணியாவில் அமைதி எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள மையவாடிக்கு அருகில் இன்று எதிர்ப்பு பேரணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள், ஜனாஸாக்களை எரிக்காதே, அடக்கம் செய்ய அனுமதி! எங்கள் உடல்களை எரித்து ஒரு வரலாற்று தவறுகளுக்கு ஆளாகாதீர்கள்! என்ற பதாதைகளை ஏந்தியவாறு எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை அமைதி எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டவர்கள் கிண்ணியா பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
இம்மகஜரில் இலங்கை நாடு பல் கலாசாரத்தையும் பண்பாடுகளையும் கொண்ட நீண்ட பாரம்பரியத்தையும் கொண்ட நாடாகும். இலங்கை முஸ்லிம்களும் இந்த நாட்டில் தமது மத சுதந்திரத்தை பூரணமாக பேணி பல நூற்றாண்டு காலம் வாழ்ந்து வருகின்றனர்.
அண்மையில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை எரியூட்டும் நடவடிக்கை முஸ்லிம்களை மிகவும் பாதித்துள்ளது.
இந்த நடவடிக்கையினை நிறுத்துவதற்கு தாங்கள் பின்வரும் நடவடிக்கைகளை எடுப்பீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.
துறைசார் நிபுணர் குழுவை மீளமைத்தல், மாற்றுக் கருத்தாளர்களின் கருத்தை தெரிவிக்கும் உரிமை மதிக்கப்பட வேண்டும்.
சக இன மத நம்பிக்கைகள் மதிக்கப்படவேண்டும். உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலை எமது நாடு பின்பற்றவேண்டும்.
எமது நாடு சுபிட்சம் நிறைந்த நாடாக மிளிர வேண்டும் எனில் இறுதி கடமையைச் செய்யும் மக்களின் உரிமையை மதிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் மகஜரை மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கிண்ணியா பிரதேச செயலாளர் பொதுமக்களிடம் இதன்போது தெரிவித்துள்ளார்.
இதில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றதுடன் கிண்ணியா உலமா சபை, சூரா சபை,வர்த்தக சம்மேளனம், அனைத்து பள்ளிவாசல் சம்மேளனம் உட்பட உள்ளூராட்சி மன்ற தவிசாளர், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு வெள்ளை துணியிலான கவன் சீலை துணி துண்டுகளை கட்டி ஜனாசா எரிப்புக்கான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
கிண்ணியா பொலிஸாரால் கவன் சீலையினால் கட்டப்பட்ட வெள்ளை நிற துணிகள் பின்னர் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.