கிளிநொச்சியில் 5 கோரிக்கைகளை முன்வைத்து தனிநபர் உண்ணாவிரதப் போராட்டம் - அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதி
கிளிநொச்சி - பச்சிளைப்பள்ளி வண்ணங்கேணி பகுதியில் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து குடும்பஸ்தர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம், பிரதேச செயலாளரின் சாதகமான வாக்குறுதிகளை தொடர்ந்து தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது, கடந்த 25ஆம திகதி 8 மணியளவில் வண்ணங்கேணி பகுதியில், சிறுதுளி நீரும் அருந்தாமல் அமைதி வழி கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
அத்துடன், தனிநபர் போராட்டத்திற்கு ஆதரவாக அந்த பகுதி பொது மக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
போராட்டக்காரர்களின் 5 கோரிக்கைகள்
இதன்போது, விவசாயத்திற்காக ஒதுக்கப்பட்ட காணிகளை முறைப்படி பிரிவு செய்து, எஞ்சிய பூமியைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் (சாணம் பாய்ச்சுதல்) செய்ய வழிவகுக்க வேண்டும்.
பின்தங்கிய சொத்தாகக் கருதப்படும் 500 ஏக்கர் காட்டில், 50 ஏக்கர் காணியை முதலீட்டுக்காக விடுவித்து, எமது கிராம மக்களுக்குப் பகிர்ந்து அளிக்க வேண்டும்.

அத்துடன், கிராமத்தின் அபிவிருத்திக்குத் தடையாகவும், விவசாயத்தை வளர்க்க விடமாட்டோம் எனக் கூறியும் வரும் கிராம சேவையாளரை (GS) உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்.
மேலும், போதைப்பொருள் பாவனை இல்லாத ஒரு தூய்மையான அழகிய விவசாய கிராமத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
அரச திட்டங்கள் மற்றும் சமூகப் பயன்பாடுகள் மக்களுக்குச் சரியாகச் சென்றடைய வேண்டும். அரசு ஊழியர்கள் சாதிவாதம், மொழிவாதம் மற்றும் இனவாதம் பார்ப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதிகாரிகளின் வாக்குறுதி
இதனைத் தொடர்ந்து, நேற்று(26) இரண்டாம் நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், பிற்பகல் 2 மணியளவில் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலாளர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் போராட்டம் நடக்கும் இடத்திற்கு சென்று கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்டுள்ளனர்.

அதன் பின்னர், போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களுடன் கலந்துரையாடிய அதிகாரிகள், முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றித் தருவதாக பகிரங்கமாக வாக்குறுதியளித்துள்ளனர்.
இந்நிலையில், உண்ணாவிரதப் போராட்டம் அமைதியான முறையில் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.