இலங்கை, இந்திய மற்றும் தமிழக அரசாங்கங்களுக்கு எதிராக சென்னையில் போராட்டம்
இலங்கையின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்கக் கோரியும், அவர்கள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு கோரியும், மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், முற்றுகைப் போராட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த முற்றுகை போராட்டம் ஒக்டோபர் 8ஆம் திகதி சென்னையில் நடாத்தப்படவுள்ளது.
இதன்போது, இலங்கை துணை உயர்ஸ்தானிகரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கு கடிதம்
கடல் எல்லைக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 162 கடற்றொழிலாளர்களையும் இலங்கை அரசு விடுவிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட 192 படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதன் மூலம் தனது கடமை முடிந்துவிட்டதாக தமிழ்நாடு அரசாங்கம் நினைக்கிறது.
எனினும், இந்த விடயம், தமிழ்நாட்டின் சமூக பொருளாதாரங்களில் பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |