மட்டக்களப்பில் எரிவாயுவை வழங்க கோரி வீதியை மறித்து போராட்டம் (Photos)
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடாவில் எரிவாயுவைத் தருமாறு கோரி மக்கள் வெற்று கொள்கலன்களுடன் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று பகல் 12 மணியளவில் இடம்பெற்ற இப்போராட்டத்தினால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டது.
குறித்த பகுதியைச் சேர்ந்த மக்கள் எரிவாயுவைப் பெறமுடியாமல் அங்கும் இங்குமாக அலைந்து திரிந்தும் பாரிய இன்னல்களை எதிர்கொண்டனர்.
வீதியை மறித்து போராட்டம்
இந்நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் ஒன்று கூடி கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதியை மறித்து வெற்று கொள்கலன்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த பகுதியின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டதையடுத்து காத்தான்குடி பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று போராட்டக்காரர்களை வீதியை விட்டு விலகுமாறு கோரியுள்ளனர்.
ஆனால் போராட்டக்காரர்கள் தமக்கு எரிவாயு தந்தால் தான் இங்கிருந்து வெளியேறுவோம் என தெரிவித்து சுமார் அரை மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்களுக்கு வாக்குறுதி
இந்நிலையில் எரிவாயு பிரதான முகவருடன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தொடர்பு கொண்டு பின் ஆர்ப்பாட்டக்காரர்களிடம், தற்போது எரிவாயு இல்லை எனவும் எதிர்வரும் 12ஆம் திகதி மக்களுக்கு எரிவாயு தருவதாக முகவர் தெரிவித்துள்ளதாகவும் வாக்குறுதி வழங்கியதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.