16 வருடங்களாக போக்குவரத்து வசதியின்றி தவிக்கும் மக்கள் - கிளிநொச்சியில் வெடித்த போராட்டம்
கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதிக்கு செல்லும் பிரதான வீதி புனரமைக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று(19.08.2026) வீதியை மறித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
விஸ்வமடு சந்தியில் இருந்து பிரமந்தனாறு பகுதிக்குச் செல்லும் பிரதான வீதியின் சுமார் இரண்டு கிலோமீட்டர் பகுதி ஏற்கனவே புனரமைக்கப்பட்டு காபெட் வீதியாக காணப்படுகிறது. எனினும், எஞ்சியுள்ள சுமார் மூன்று கிலோமீட்டர் வீதி இதுவரை புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
16 வருடங்களாக புனரமைக்கப்படாத வீதி
குறித்த வீதி புனரமைக்கப்படாத பிரச்சினை சுமார் 16 வருடங்களுக்கும் மேலாக தொடர்வதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் நாளாந்த போக்குவரத்து நடவடிக்கைகளில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக, மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்வதிலும், கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் இந்த வீதியின் மோசமான நிலை பாதிப்பை ஏற்படுத்துவதாக போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போதைய அரசாங்கம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வரும் நிலையில், பிரமந்தனாறு பிரதான வீதியின் எஞ்சிய பகுதியையும் விரைவாக புனரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
