சுதுமலை புவனேஸ்வரி அம்மன் ஆலய கட்டடம் தொடர்பான விவகாரம்: போராட்டத்தில் குதித்த மக்கள்
சுதுமலை அம்மன் ஆலயத்தின் நிர்வாகத்தினரின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் அசமந்தப் போக்கான செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சீரணி நாகம்மாள் கோவிலுக்கு முன்பாக ஆரம்பமான இந்த போராட்டமானது சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் வரை சென்றது.
பின்னர் பிரதேச செயலக பதவி நிலை அதிகாரி ஒருவரிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
புனர் நிர்மாணம் செய்ய தீர்மானம்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், எமது சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் ஆலயம் தொன்மையும், புதுமையும் வாய்ந்த ஒரு ஆலயம். ஆலய நிர்வாகத்தின் குறுகிய சிந்தனையுடன் 48 கோடி ரூபாய் நிதியில் ஆலயத்தை புனர் நிர்மாணம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அந்தப் புனரமைப்பு பணிகளுக்காக எனக் கூறி எமது மூதாதையர்கள் அமைத்த பழமையான கட்டடங்கள் இடித்தழிக்கப்பட்டன. இதனால் பழைய ஆதாரங்கள் இல்லாமல் போகும் அபாயம் உள்ளது. புனர்நிர்மாணத்தை நாங்கள் தடுக்கவில்லை தேவையான விடயத்தை புனர்நிர்மாணம் செய்துவிட்டு ஆலயத்தின் பழமையை பேணிப் பாதுகாக்க வேண்டும்.
ஆலயத்தில் பழமையே எமது இருப்பினையும் எடுத்துக்காட்டும். போலி ஆவணங்களை தயாரித்து, அதன் மூலப் பிரதிகள் இல்லாமல் பிரதிகளை பிரதேச செயலரிடம் ஒப்படைத்த நிலையில் அடிப்படையில் பிரதேச செயலகமும் அதற்கு அனுமதி வழங்கியதால் அந்த பழமையான கட்டடம் இடிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் இரவு பகலாக இந்த ஆலயத்தில் நின்று தொண்டு செய்த அடியவர்கள். இந்த கட்டிடம் இடித்தழிக்கப்பட்ட பின்னர் எவரும் ஆலயத்திற்கு தற்போது வருவதில்லை. 70 - 80 இளைஞர்கள் இந்த ஆலயத்தில் தொண்டு செய்து வந்தார்கள். ஆனால் தற்போது யாரும் செல்லாத நிலையில் வாடகைக்கு இயந்திரங்களை வேலைக்கு அமர்த்தி ஆலயத்தின் வாகனங்களை அகற்றுகின்றனர்.
நிதி சேரிப்பு
கட்டட நிர்மாணத்திற்காக ஊர் மக்களிடம் நிதி சேகரிக்கின்றனர். ஆனால் ஊர் மக்களிடம் அபிப்பிராயம் கேட்பதில்லை. நிர்வாகத்திற்குள் உள்ளவர்கள் தவறுகளை சுட்டிக்காட்டும் பட்சத்தில் அவர்கள் நிர்வாகத்தில் இருந்து நீக்கப்படுகின்றார்கள். படித்தவர்கள் நிர்வாகத்திற்குள் இருந்து கொண்டு பாமர மக்களை ஏமாற்றுகின்றனர்.
திருவிழா காலங்களில் பட்டோலை வழங்கப்படுவது வழமை. அதற்கு ஆலய நிர்வாகத்தினரால் கையொப்பங்களும் பெறப்படும். அவ்வாறு பெறப்பட்ட கையொப்பங்களை ஸ்கான் செய்து கட்டடத்தை இடிப்பதற்கு ஊர் மக்கள் கையொப்பமிட்டதாக பிரதேச செயலகத்துக்கு வழங்கினார்கள். அதன் மூலப் பிரதியை பார்க்காமல் பிரதேச செயலகமும் கட்டடத்தை இடிப்பதற்கு அனுமதி வழங்கியது.
பழைய கட்டடத்தை இடிக்கக் கூடாது என நாங்கள் ஏற்கனவே பிரதேச செயலகத்தின் முறைப்பாடு செய்திருந்தோம். ஆனால் அவர்கள் எம்மை கூப்பிட்டு விசாரணை செய்யாமல் இந்த போலியான கடிதத்திற்கு அனுமதி வழங்கியது தவறு. அத்துடன் கட்டடத்தை இடிப்பதற்கான அனுமதி கடிதத்தை பிரதேச செயலகம் வழங்கும் போது முறைப்பாட்டாளருக்கும் வழங்க வேண்டும், ஆலய நிர்வாகத்தினருக்கும் வழங்க வேண்டும். ஆனால் அவர்கள் ஆலய நிர்வாகத்தினருக்கு மாத்திரமே வழங்கினர்.
முறைப்பாட்டாளராகிய எமக்கு ஏன் அனுமதி கடிதம் தரப்படவில்லை என நாங்கள் உதவி பிரதேச செயலரிடம் கேட்டபோது அவர் மறந்துவிட்டதாக பொறுப்பற்ற வகையில் கூறினார். பிரதேச செயலகத்திடம் நாங்கள் முறைப்பாடு செய்த போது தமக்கு வேலை சுமை இருப்பதாக தெரிவித்த அதிகாரிகள் எம்மை ஒவ்வொரு இடங்களுக்கு அனுப்பி அலைக்கழிக்கின்றார்கள்.
பிரதேச செயலக கூட்டங்களுக்கு வருமாறு எமக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. நாங்கள் கூட்டத்திற்கு சென்ற போது பிரதேச செயலக அதிகாரிகள் அவர்கள் கொழும்பில் நிற்பதாக கூறுகின்றார்கள். பின்னர் நாங்கள் பார்க்கின்றபோது அவர்கள் ஆலயத்திற்குள் நின்று ஆலயத்தை இடிப்பதற்கான வேலை திட்டத்தில் ஆலய நிர்வாகத்துடன் இணைந்து ஈடுபடுகின்றார்கள். அதற்கான காணொளி ஆதாரமும் எம்மிடம் உள்ளது.
பிரதேச செயலகத்தின் துணையுடனேயே இந்த கட்டடம் இடிக்கப்பட்டது. நட்பு ரீதியாகவோ அல்லது உறவு ரீதியாகவோ அதிகாரிகள் துணை போகின்றார்கள் என எமக்கு தெரியாது. தற்போது ஆலய புனரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் தரமற்ற மூலப் பொருட்களாகவே காணப்படுகின்றன. ஆலய புனரமைப்பு முறையடைந்து சில வருடங்களிலேயே ஆலய கட்டடங்கள் சேதமடையக்கூடிய நிலைமையும் காணப்படுகின்றது.
எமது ஆலயத்திற்கு என் ஒரு பாரம்பரிய அமைப்பு இருக்கின்றது. அந்த அமைப்பிலேயே இனி அமைக்கப்படவுள்ள எமது ஆலயம் அமைக்கப்பட வேண்டும். தேவைற்ற கட்டடங்கள் ஆலயத்திற்கு தேவை இல்லை. இனி இடம்பெறுகின்ற நிர்மாண பணிகள் அரச திணைக்களம் ஒன்றின் கண்காணிப்பின் கீழேயே இடம்பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.











