மீண்டும் ஆயுதம் தூக்கினாலே எமக்கு தீர்வு: நெடுங்கேணியில் கொதித்தெழுந்த முதியவர் (Video)
மீண்டும் ஆயுதம் தூக்கினாலே எமக்கு தீர்வு கிடைக்கும் என வவுனியா - நெடுங்கேணியில் முதியவர் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டத்தின் போது ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனும் தொனிப்பொருளில் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுசரணையோடு நீதிக்கான மக்கள் அமைப்பினால் நெடுங்கேணி கந்தசாமி ஆலய முற்றத்தில் நேற்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், நாங்கள் இந்த மண்ணிலே ஏன் பிறந்தோம் என்றுதான் சிந்திக்க தோன்றுகின்றது. பட்டதாரிகள் மாணவர்கள் உரிமைக்காக போராடிய போது பயங்கரவாத சட்டம் என்று கூறி கைது செய்கிறார்கள்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு நாடாளுமன்றத்திற்கு செல்வதற்கு ஒரு ஆசனம் கூட இல்லை.
அவர் எங்களுக்கு ஆட்சி புரிவதென்றால் எவ்வாறு, இது பாரத பரம்பரை, இது வன்னிமண் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
முதலாம் இணைப்பு
வவுனியா - நெடுங்கேணி கந்தசாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனும் தொனிப்பொருளில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுசரணையோடு நீதிக்கான மக்கள் அமைப்பினால் நெடுங்கேணி கந்தசாமி ஆலய முன்றலில் நடத்தப்பட்டுள்ளது.
நூறு நாள் செயற்திட்டத்தில் 24ஆம் நாள்
நிரந்தரமான அரசியல் தீர்வை வலியுறுத்தி இடம்பெற்று வரும் நூறு நாள் செயற்திட்டத்தின் 24ஆம் நாளான இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘கௌரவமான உரிமைக்கான மக்கள் குரல், மக்கள் குரல் ஓய்ந்திருந்ததே தவிர ஒருகாலமும் ஒடுங்கியிருக்கவில்லை, ஜனநாயக பாதையில் மக்களே மக்களுக்காய்’ போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
வவுனியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் குறித்த போராட்டத்தில் கலந்து
கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.