கொழும்பில் ஒன்றுகூடிய பல்கலைக்கழக மாணவர்களின் பேரணியை கலைக்க பொலிஸார் முயற்சி (Photos)
கொழும்பு - ஹவ்லொக் பகுதியில் வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுதந்திரக்கல்வியை சீர்க்குலைக்கும் அரசாங்கத்திற்கு எதிராக இன்றைய தினம் (10.08.2023) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் ஆர்ப்பட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டமானது லிப்டன் சுற்றுவட்டாரத்தில் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமாகவிருந்த போதும், நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக இந்த முயற்சி தடைப்பட்டிருந்தது.
இவ்வாறான சூழலில் ஹவ்லொக் மற்றும் விகாரமகாதேவி பகுதியிலிருந்து ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல இடங்களுக்குள் உட்பிரவேசிப்பதற்கு தடை
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மதுசான் சந்ரஜித் உள்ளிட்ட 10 பேருக்கு கொழும்பு கோட்டை பிரதேசத்தின் பல இடங்களுக்குள் உட்பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே இன்று(10.08.2023) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் இன்று முன்னெடுக்கப்படும் போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என பொலிஸாரால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், நிதி அமைச்சு, காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகை உள்ளிட்ட இடங்களுக்குள் உட்பிரவேசிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், அமைதியான முறையில் போராட்டங்களை நடத்த முடியும் என்று கோட்டை நீதிவான் தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவை மீறும் போராட்டக்காரர்களை கைது செய்வதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது என்றும் நீதிவான் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி-ராகேஷ்



