அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி பகுதியில் நீதிக்கான மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்றைய தினம் (11.11.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொறுப்பற்ற மற்றும் சட்டவிரோத வாகன ஓட்டத்தால் வீதிகளில் அநியாயமாகப் பறிபோகும் உயிர்களுக்கு நீதி கோரியும், வீதிப் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்த வலியுறுத்தியும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 06ஆம் திகதி இரவு, இஷாத் தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்குச்
சென்றுகொண்டிருந்த அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டியைச் சேர்ந்த நிசாம்
ஹாஜியார் என்பவர், 17 வயதுடைய சிறுவன் ஒருவன் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்து
உயிரிழந்தார்.
மக்களிடையே சோகம்
ஏற்கனவே இப்பகுதியில் பலர் வீதி விபத்துக்களால் உயிர்களை இழந்துள்ள நிலையில்,
நிசாம் ஹாஜியாரின் மரணமும் அப்பகுதி மக்களிடையே பாரிய சோகத்தையும்
கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தைக் கண்டித்தும், எதிர்காலத்தில் இத்தகைய சோகங்கள் இடம்பெறுவதைத்
தடுக்கும் நோக்கிலும் ஊர்மக்கள், உறவினர்கள், இளைஞர்கள் மற்றும் வீதி ஒழுங்கு
இயக்கம் இணைந்து பட்டியடிப்பிட்டியில் (11) இக் கவனயீர்ப்புப்
போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது, பக்கச்சார்பற்ற விசாரணை: நிசாம் ஹாஜியார் அவர்களின் மரணம் தொடர்பில்
உடனடியாகப் பக்கச்சார்பற்ற, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு உண்மைகள்
வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்.
விபத்துக்குக் காரணமான நபர் மற்றும் அதற்குப்
பொறுப்பானவர்கள் உடனடியாகச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, உரிய தணிக்கை
மற்றும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். வயது குறைந்தவர்கள் மற்றும் சாரதி
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக வாகனம் செலுத்துவதைக் கடுமையான சட்டங்கள்
மூலம் முற்றாகத் தடுக்க வேண்டும்.
வாகனப் பயன்பாடு
அதிவேக மற்றும் பொறுப்பற்ற வாகன ஓட்டத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் வீதிகளில்
விசேட வீதித் தடை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
பெற்றோர்கள் தமது சிறுபிள்ளைகளின் வாகனப் பயன்பாட்டைக் கண்டிப்புடன்
கண்காணித்து, பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் வீதிகளில் உயிர்ப்பலிகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் உரிய
வீதிச் சமிக்ஞைகள் மற்றும் வேகக் கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் கூடிய நிரந்தர
வீதிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மேலும், இறந்தவருக்குத் தகுந்த நீதி கிடைக்கும் வரையிலும், வீதிகளில் பொதுமக்கள்
பாதுகாப்பாக நடமாடும் சூழல் உருவாகும் வரையிலும் நீதிக்கான தங்களது குரல்
ஓயாது எனப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.