மகிந்த வந்ததால் நீங்கள் இந்த வீதிக்கு மேல் இல்லையென்றால் பங்கருக்குள் தான் இருந்திருப்பீர்கள்: போராட்டத்தில் குழப்பம் விளைவித்த நபர்
மகிந்த வந்ததால் நீங்கள் இந்த வீதிக்கு மேல் இல்லையென்றால் பங்கருக்குள் தான் இருந்திருப்பீர்கள் என திருகோணமலையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரினால் சற்று அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
திருகோணமலையில் அரசுக்கு எதிராக பல தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
திருகோணமலை பிரதான பேருந்து தரிப்பு நிலையத்திற்கு முன்பாக கூடிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் “எழுபத்தி நான்கு வருட தசாப்தத்திற்கு முடிவு கட்டுவோம்”, “மக்களை வதைக்கும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது, ஆட்சியாளர்களுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பிய வண்ணம் இருந்த தருவாயில் மதுபோதையில் வருகைதந்த வயோதிபர் ஒருவர் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு இடையூறு விளைவித்ததுடன் நாட்டில் பல அபிவிருத்தி திட்டங்கள் மகிந்த ராஜபக்சவினாலேயே முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்து அவ்விடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்களினால் கோஷமிட்டு உரிய வயோதிபரை அவ்விடத்திலிருந்து அகற்ற முற்பட்டபோது குறித்த வயோதிபரை பொலிஸார் அழைத்துச் சென்று பின்னர் விடுவித்ததாக தெரியவருகின்றது.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
“மதிப்பிற்குரிய ஜனாதிபதி, பிரதமர் அவர்களே நாங்கள் இவ்விடத்தில் கூடியிருப்பது விளையாட்டு அல்ல எமது பிரச்சினைகள் எமது கஷ்டங்கள் எமக்கு மாத்திரமே தெரியும். நீங்கள் அங்கே இருந்து கொண்டு மக்களுக்கு எந்தவித பிரச்சினை இல்லை என எவ்வளவு கூறினாலும் எமது கஷ்டம் எமக்கு மாத்திரமே தெரியும்.
நாட்டு மக்களின் கருத்துக்களுக்கு செவிமடுக்காமல் பதவி ஆசைகளுக்காக தமது கதிரைகளை தக்க வைத்துக் கொள்வதற்காக அரசாங்கம் இவ்வாறு நடந்து கொள்வது மனதுக்கு வேதனை அளிக்கின்றது.
இவ்வாறு ஆட்சி அதிகாரிகள் அதிகாரங்களுக்கு ஆசைப்பட்டு மக்களின் கருத்துக்களுக்கு செவிமடுக்காமல் இருக்கும் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பும் நோக்கில் திருகோணமலை நகர மத்தியில் அரச மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடியுள்ளோம்.
எனவே மக்களின் கருத்துகளுக்கு செவி மடுத்து தமது பதவிகளை இராஜினாமா செய்து வீட்டுக்கு செல்லுமாறு கேட்டுகொள்கின்றோம். அவ்வாறு இல்லாவிட்டால் எதிர்வரும் நாட்களில் பாரிய ஒரு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவும் தயங்கமாட்டோம்” எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.








