வாழைச்சேனையில் மண் அகழ்வை எதிர்த்து ஆர்பாட்டம்! இருவர் கைது
மட்டக்களப்பு வாழைச்சேனை கிண்ணியடி பிரதேசத்தில் மீன் வளக்கும் திட்டம் என்ற போர்வையில் பாரிய குழிகளை தோண்டி மண் அகழ்வு இடம்பெற்று வருவதை எதிர்த்து பிரதேச மக்கள் மண்ணை ஏற்றிச் செல்லும் கனரக வாகனத்தை வழிமறித்து இன்று வியாழக்கிழமை (08) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருடன் பேசுவதற்கு சென்ற தமிழரசு கட்சி வேட்பாளர் உட்பட இருவரை கைது செய்ததயைடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன் பொலிஸாரின் அடாவடியை எதிர்த்து தொடர்ந்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிண்ணியடி ஐஸ் உற்பத்தி நிலையத்துக்கு அருகாமையிலுள்ள தனியார் காணி ஒன்றில் 2021 ம் ஆண்டு மீன் வளர்க்கும் திட்டத்தின் கீழ் பாரிய குழிகளை தோண்டி மண் அகழ்ந்து வெளியிடங்களுக்கு எற்றிச் சென்று விற்பனை செய்து வந்துள்ளனர்.
கிராமத்து இளைஞர்கள்
இதனை கண்டித்து கடந்த காலத்தில் கிராமத்து இளைஞர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களையடுத்து இத் திட்டம் இடைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் கடந்த முதலாம் திகதி குழிகளை தோண்டி மண் அகழ்வில் ஈடுபட்டதையடுத்து அங்கு சென்ற கிராம மட்ட அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மண் அழ்வில் ஈடுபட்டவர் தற்போது எங்களிடம் அனுமதி உண்டு என தெரிவித்து பொலிஸாருக்கு தெரிவித்த முறைப்பாட்டையடுத்து எதிர்ப்பு தெரிவித்தவர்களை பொலிஸார் கைது செய்து அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து பொலிஸ் பிணையில் விடுவித்தனர்.
இந்த நிலையில் சம்பவதினமான இன்று காலை 10.00 மணியளவில் பிரதேச மக்கள் ஒன்று திரண்டு அகழ்ந்த மண்ணை ஏற்றி வேறு இடத்துக்கு கொண்டு சென்ற கனரக வாகனத்தை வீதியில் வழிமறித்து எங்கள் கிராம மண் வளத்தை அழிக்காதே, மண் வளத்தை அழிக்கும் துரோகியே ஒழிக, சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பு என சுலோகங்கள் ஏந்தியவாறு குறித்த திட்டத்தினை நிறுத்த கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸாருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழரசு கட்சி வேட்பாளர் மற்றும் இளைஞன் சென்று பேசிய நிலையில் அவர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்ததையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டகாரர்கள் கைது செய்த இருவரையம் விடுதலை செய்யுமாறும் கோரிய நிலையில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக வழக்கு பதிவு செய்துவிட்டு அவர்களை பிணையில் விடுவித்தனர்.
அதிகாரிகள் தீர்மானம்
இது தொடர்பாக அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் பிரதேச செயலாளர் நில அளவை சுரங்க பணியகம் மற்றும் மாவட்ட நன்னீர் மீன் வளர்ப்பு அலுவலகம், மத்திய சுற்றாடல் அதிகார சபை போன்ற திணைக்களங்களுடன் விசேட கலந்துரையாடல் இடம்பெற்று அடுத்து வரும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் வரை இந்த மண் அகழ்வை இடை நிறுத்தி வைக்க அதிகாரிகள் தீர்மானித்தனர்.
இருந்தபோதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கு கொட்டகை அமைத்து தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri
