வடக்கு மாகாண ஆளுநருக்கு எதிரான போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதையடுத்து, அவருக்கு எதிரான போராட்டத்துக்கு நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
நாளைய தினம் (22.05.2023) காலை 9.30 மணியளவில் யாழ். சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் பொறுப்பேற்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
மேலும், அவரது நியமனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னைய ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் ஆதரவாளர்கள் என்று நம்பப்படும் 6 பேர் ஒன்றிணைந்து நேற்று முன்தினம் (19.05.2023) போராட்டம் நடத்தியிருந்தனர்.
இடையூறு ஏற்படுத்தக்கூடாது
இதையடுத்து அவர் நாளைய தினம் பதவியேற்கும்போதும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவித்து யாழ்ப்பாணப் பொலிஸாரால் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் சுவர்ணலிங்கம் வர்ணன், சிவசேனா அமைப்பின் சிறீந்திரன், இலங்கை சைவ ஆதின நிலையத்தின் தலைவர் விபுலானந்தன் சுவாமி ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு போராட்டம் நடத்த முடியும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஏ-9 வீதியை மறிக்கக் கூடாது, ஆளுநர் அலுவலகச் சூழலில் பரப்புரை முன்னெடுக்கக் கூடாது, ஆளுநர் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது, ஆளுநரின் பதவியேற்புக்கு வரும் எந்தவொரு அதிகாரிக்கும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



