அலரி மாளிகை வளாகத்தில் மீண்டும் கூடாரங்களை அமைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் (VIDEO)
கொள்ளுப்பிட்டியில் அலரி மாளிகைக்கு முன்பாக பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்களை உடனடியாக அகற்றுமாறு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிக்கு பின்புறத்தில் மீண்டும் கூடாரங்களை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நடைபாதை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக அலரிமாளிகைக்கு முன்பாக உள்ள வாகனங்கள் மற்றும் அனைத்து உடைமைகளையும் அகற்றுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுக்கமைய, அலரிமாளிகை முன்பாக உள்ள நடைபாதையில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் மற்றும் பாரஊர்திகள் அகற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில்,குறித்த பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட போராட்டக்காரர்கள் அடுத்த வீதியில் மீண்டும் கூடாரங்களை அமைத்து தனது போராட்டத்தை மீண்டும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அலரி மாளிகைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சார்பில் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





