சட்டமா அதிபருக்கு எதிராகவும் ஆதரவாகவும் ஒரே நாளில் போராட்டங்கள்
சட்டமா அதிபரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பொதுப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தை சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.
அதன்படி, எதிர்வரும் 21ம் திகதி காலை 10.00 மணிக்கு கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தில் நடைபெறுவதாகக் கூறப்படும் ஊழல் நடவடிக்கைகள் மற்றும் ஊழலில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கும் வகையில் சட்டமா அதிபர் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்தப் பொதுப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், சில ஊழல் குற்றச்சாட்டுகளுக்குள்ளான நபர்களுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்தாமல், அவர்களை பாதுகாக்கும் போக்கில் சட்டமா அதிபர் செயல்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சட்டமா அதிபருக்கு எதிரான முக்கிய குற்றச்சாட்டுகளில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணைகளின் போது சட்டமா அதிபர் பக்கச்சார்பாக செயல்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, மஹர சிறை கைதி கொலை, மகேஷ் இந்திக என்ற இளைஞர் கொலை உள்ளிட்ட சம்பவங்களில் சட்டமா அதிபர் திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைகளும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன.
மேலும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒரு பெண் அதிகாரியின் சகோதரரின் மனைவி பாதாள உலக குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் போராட்டக்காரர்களால் குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, லசந்த விக்ரமதுங்க கொலை வழக்குடன் தொடர்புடைய சில சந்தேகநபர்களை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்க சட்டமா அதிபர் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக, கடந்த ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு எதிரில் போராட்டம் நடைபெற்றது.
மேலும், திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில், பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற சட்டமா அதிபர் திணைகக்ளம் எடுத்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பின்னணியில், ஊழல்மிக்க நிர்வாகத்திற்கு எதிராக குரல் எழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என போராட்ட அமைப்பாளர்கள் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதேவேளை, சட்டமா அதிபரின் நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டம் நடைபெறும் அதே நாளில், சட்டமா அதிபரின் மரியாதையை பாதுகாக்க வேண்டும் எனக் கூறி “ஃப்ரீ லாயர்ஸ்” (Free Lawyers) அமைப்பும் பிற்பகல் 1.45 மணிக்கு தனிப்பட்ட போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
வழக்கறிஞர்கள் புதுக்கடை சட்டமா அதிபர் அலுவலகம் அருகில் திரளுமாறு சட்டத்தரணிகளுக்கு இந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. சட்டமா அதிபர் துறையின் மரியாதையை உறுதி செய்வதே தங்களது போராட்டத்தின் முக்கிய நோக்கம் என “ஃப்ரீ லாயர்ஸ்” அமைப்பு தெரிவித்துள்ளது.