உடைக்கப்பட்ட செம்மணி அணையா விளக்கு நினைவு தூபி! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாரதூரமான இனப்படுகொலைக்கான சாட்சியங்களை வரலாற்றாக்கும் வகையில் அமையப்பெற்ற நினைவு இடங்களை நாம் பாதுகாப்பது அவசியம் என்று வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.
அவற்றை பாதுகாப்பதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அணையா விளக்கு நினைவு தூபி
செம்மணியில் அமையப் பெற்ற அணையா விளக்கு நினைவு தூபி உடைக்கப்பட்ட நிலையில் அதனை மீளமைக்கும் முயற்சிகளில் ஒத்துழைப்பு நல்கிய நிலையில் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி என்பது தமிழ் மக்களுக்கு எதிராக எவ்வளவு தூரம் உள்நாட்டில் இனப்படுகொலை நடைபெற்றது என்பதை சர்வதேச அளவில் ஆதாரப்படுத்தி நிற்கின்றது.
அணையா விளக்கு போராட்டம் இடம்பெற்ற இடம் மற்றும் இந்த நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ள பகுதி என்பன யாழ் குடாநாட்டை இலங்கை அரச படைகள் கைப்பற்றிய பின்னர் அரச படைகளால் வன்புணர்வு செய்யப்பட்டு புதைக்கப்பட்ட கிரிசாந்தி குமாரசுவாமியின் உடலம் மற்றும் பிள்ளையை தேடிச்சென்ற பெற்றோர் அயலவர் என நீதி கேட்ட பலரும் படுகொலை செய்யப்பட்டு மீட்கப்பட்ட பகுதி ஆகும்.
தமிழ் மக்கள்
இந்த இடத்திலேயே இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையர் வோல்கரும் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தமிழ் மக்களின் மீது வடக்குக் கிழக்கில் அரசினால் கட்டவீழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதத்தின் சாட்சியங்கள் அபிவிருத்தி என்ற போர்வையில் பல இடங்களில் திட்டமிட்டு மாற்றியமைக்கப்பட்டுவிட்டன.
மேலும் சில இடங்கள் தனிநபர்களாலும் அழிக்கப்பட்டு வருகின்றன.
இப்போது தமிழ் மக்களுக்கு அரச பயங்கரவாதத்தினால் எதுவுமே நடக்கவில்லை என சொல்வதற்கான உத்திகளே நடைபெறுகின்றன.
இவற்றில் தமிழ் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும் எமக்கெதிரான அடக்குமுறைகளை ஆவணப்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் நாம் அவதானமாக இருக்கவேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.