அரசாங்கத்தின் பிரதான கடமையை நாம் சரியாகச் செய்வோம்! பிரதமர் உறுதிமொழி
பேரிடர்களின்போது பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன், மீண்டும் அவ்வாறான பேரிடர்கள் ஏற்படாதவாறு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நீண்டகால அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுப்பது அரசாட்சியின் பிரதான பொறுப்பாகும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இரத்மலானை – கந்தவல வீதி மற்றும் அதனுடன் தொடர்புடைய நிர்மாணங்களை மேம்படுத்தும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றபோதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமது அரசின் நகர அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து மேலும் விளக்கிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, "நகர அபிவிருத்தி எமது பிரதான பொறுப்பாகும். அதற்காகக் கொழும்பு மாவட்டத்திலும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.
அமைச்சரவை அனுமதி
கடந்த 27 ஆம் திகதி கொழும்பு பேஸ்லைன் வீதி அபிவிருத்திப் பணிகளின் மூன்றாம் கட்டத்தை ஆரம்பித்தோம். அதற்காக 2.8 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, 15 ஆயிரத்து 77 மில்லியன் ரூபா செலவிலான கொலன்னாவ மழைநீர் வடிகாலமைப்புத் திட்டத்துக்கும் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
வெள்ள அபாயத்துக்கு உள்ளாகும் கொழும்புப் பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கு நீண்டகாலத் தீர்வுகளை வழங்க விரிவான திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
நிதி ஒதுக்கீடு
இந்தத் திட்டங்கள் அனைத்தும் வெளிநாட்டுக் கடன்கள் இன்றி, முழுக்க முழுக்க உள்நாட்டு நிதியிலிருந்தே நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

அரசின் முறையான நிதி முகாமைத்துவமும் உள்நாட்டு வருமானங்களின் அதிகரிப்பும் திறைசேரியைப் பலப்படுத்தியுள்ளமையால், கடன் பெறாமலேயே அபிவிருத்திப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் இயலுமை கிடைத்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.