தமிழ் மக்களுக்கு அரசு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு
எமது அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்று(22) சபையில் முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், "அரசு தமிழ் மக்களுக்குப் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. அவற்றை நடைமுறைப்படுத்துவது உறுதி.
தையிட்டி விகாரைப் பிரச்சினை
அந்தவகையில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும். காணாமல் போனவர்களுக்கு நீதி வழங்கப்பட்டு தையிட்டி விகாரைப் பிரச்சினைக்கு இரண்டு மாதங்களுக்குள் தீர்வு காணப்படும்.
அரசியல் கைதிகள் விடுதலை போன்றவை தொடர்பிலும் அரசு அதிக கவனம் செலுத்தி வருகின்றது. தமிழ் மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
அதற்காக அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் சிந்திக்கும்போதும் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகியிருக்கின்றது என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.
ஏனென்றால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்று நேற்றைய பிரச்சினையல்ல. அது காலங்காலமாக புரையோடிப் போயுள்ள பிரச்சினையாகும்.
சுயநிர்ணய உரிமை
அதனை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது ஒரு சிலர் கூறுவது போல் இன்று தமிழ் மக்களின் பிரச்சினைகள் கேள்விக்குறியாகி இருக்கின்றன.
தமிழ் மக்களின் நிலங்கள், உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் தொடர்பில் பாகுபாடுகள் காட்டப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே தற்போது தமிழ் மக்களின் இருப்புக் கேள்விக்குறியாகியுள்ளது.
இழக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டுமானால் வடக்கில் மக்கள் வாழ வேண்டும்.
அதன் பின்னரே சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவதா அல்லது தனிநாட்டுக்காகப் போராடுவதா என்பதைத் தீர்மானிக்க முடியும். அவர்கள் இலங்கையில் வாழுகின்ற மனநிலையை உருவாக்குவது அவசியமாகும் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




