பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள திட்டங்கள்: மேற்பார்வை பிரிவு நியமனம்
நாட்டில் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ள 260 பாரிய அளவிலான திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்காக, திறைசேரியின் இணை செயலாளர் ஒருவரின் கீழ் சிறப்பு மேற்பார்வை பிரிவு ஒன்று நியமிக்கப்படவுள்ளது.
இதற்கமைவாக 5.8 டிரில்லியன் ஒதுக்கீட்டிலான திட்டங்களே இவ்வாறு மேற்பார்வை செய்யப்படவுள்ளன.
வாராந்த முன்னேற்றம்
கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் உட்பட அரசாங்க நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் இந்த சிறப்புப் பிரிவானது பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள திட்டங்களின் வாராந்த முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திட்டங்கள், 2012 இல் இருந்து ஆரம்பிக்கப்பட்ட நிலையில் 2030 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிறைவு செய்யப்பட வேண்டும்.
இந்த 260 திட்டங்களில் 61 திட்டங்கள் இந்த ஆண்டின் முதல் பாதியில் நிறைவுசெய்யப்பட வேண்டியிருந்தாலும், அவற்றில் 46 திட்டங்கள் தற்போது வரையில் நிறைவு செய்யப்படவில்லை. இதனை அடுத்தே, சிறப்புப் பிரிவை அமைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
திட்டங்களின் தற்போதைய நிலை
இதுவரை, 15 திட்டங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில், ஏனைய 15 திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
134 திட்டங்களில் 59 திட்டங்களுக்கு சிறப்பு கவனம் தேவை என கருதப்படுகின்றது. 75 திட்டங்கள் சிக்கலான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேநேரம் இதுவரை 14 திட்டங்களை செயல்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள், மூலப்பொருட்களின் தட்டுப்பாடு, எரிபொருள்
நெருக்கடி, பணவீக்கம் உள்ளிட்ட பல சிக்கல்களால் இந்த திட்டங்களின் முன்னேற்றம்
தடைப்பட்டதாக திறைசேரி தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.