அதிகமான அமைச்சுக்கள் திறைசேரியின் உதவியையே நம்பியுள்ளன: நசீர் அஹமட்
அமைச்சுக்களின் செயற்பாடுகளை வினைத்திறனுள்ளதாக மாற்றுவதற்கு குறித்தொதுக்கப்படும் நிறுவனங்கள் ஆகக் குறைந்தது பத்து வருடங்களுக்காவது அதே அமைச்சின் கீழ் செயற்பட வேண்டுமென சுற்றாடல்துறை அமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அவரது அமைச்சில் நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “அதிகமான அமைச்சுக்கள் திறைசேரியின் உதவியையே நம்பியுள்ளன.
அமைச்சுக்கள் மாறுப்படும் போது இலாகாக்களும் மாறுப்பட வேண்டும்
இந்த நிலைமைகள் மாற்றப்பட்டு சொந்த முயற்சியில் உழைக்கும் நிலைமைகள் ஏற்படுவது அவசியம்.
இதற்கு, ஆகக்குறைந்தது பத்து வருடங்களுக்காவது ஒரே அமைச்சின் கீழ் குறித்தொதுக்கப்படும் இலாகாக்கள் இருக்க வேண்டும்.
இவ்வாறு நிலையாக எந்த இலாகாக்களும் ஒரே அமைச்சின் கீழ் இருப்பதில்லை. அமைச்சுக்கள் மாற்றப்படும்போது அங்குள்ள நிறுவனங்களும் மாற்றப்படுகின்றன.
சிலர், தங்களது தேவைகளுக்காக இவ்வாறு நிறுவனங்களை தமது அமைச்சின் கீழ் தருமாறு கோருகின்றனர். அமைச்சுக்கள் அதிகரிக்கப்படுகின்ற போதும் இதே நிலையே ஏற்படுகிறது.
ஏதாவதொரு இலாகாவை (நிறுவனம்) வழங்கியே ஆக வேண்டும் என்பதற்காகவும், இவ்வாறு இங்கிருப்பது அங்கும், அந்த அமைச்சிலிருக்கும் நிறுவனம் இங்கும் கொண்டு வரப்படுகிறது.
மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலம்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சுற்றாடல்துறை அமைச்சு இருந்தபோது, இருபது இலாகாக்கள் இருந்தன.
இப்போது, இரண்டு நிறுவனங்களே எனது அமைச்சின் கீழ் உள்ளன. இவ்வாறு செய்வதால், அமைச்சின் செயற்பாடுகளை வினைத்திறனுள்ளதாக மாற்ற முடியாது.
கனிம வளங்கள் மீதான முதலீட்டு நடவடிக்கை
சம்பந்தமுள்ள அல்லது அமைச்சுக்குப் பொருத்தமான நிறுவனங்கள் தான் ஒரு அமைச்சுக்கு வழங்கப்பட வேண்டும். நாட்டின் கனிம வளங்கள் உள்ள சகல பகுதிகளையும் சுற்றாடல் அமைச்சு அடையாளம் கண்டு வைத்துள்ளது.
தேவையான முதலீட்டாளர்கள் அங்கு முதலீடு செய்வதற்கான அனுமதி வழங்கப்படும். நில அகழ்வுகளில் ஈடுபடுவதற்காக 64 முதலீட்டாளர்கள் அனுமதி பெற்றுள்ளனர்.
ஆனால், இவர்களில் 47 பேர் எந்த செயற்பாடுகளிலும் ஈடுபடாமல் அனுமதிப்பத்திரங்களை வேறு விதமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இவர்களின் அனுமதி ரத்துச்செய்யப்படவுள்ளது. 2023 ஆம் ஆண்டில் ஒரு பில்லியன் டொலர் எமது அமைச்சின் கீழான நிறுவனங்களின் செயற்பாடுகளில் முதலீடு செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம்.
இதனைக் கருத்திற்கொண்டு தான் அமைச்சின் கீழுள்ள இலாகாக்களின் அதிகாரிகளுடன் மாதாந்தம் சந்திப்புக்களை நடத்தவுள்ளது” என தெரிவித்துள்ளார்.

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
