உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளை நவீனமயமாக்கும் செயற்றிட்டம் ஆரம்பம்(Photo)
உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளை நவீனமயமாக்கும் செயற்றிட்டத்தின் ஆரம்ப வைபவம் நேற்று(16) நடைபெற்றுள்ளது.
வாழைச்சேனை பிரதேச சபைக்கான கனேடிய உதவியின் கீழ் அமுல்படுத்தப்படுகின்ற உள்ளூர் பெண் தலைமைத்துவத்தை வலுப்படுத்துவதன் ஊடாக உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளை நவீனமயமாக்கும் செயற்றிட்டத்தின் ஆரம்ப வைபவம் பேத்தாழை குகநேசன் கலாசார மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
நவீனமயமாக்கும் செயற்றிட்டம்
உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம் மற்றும் கனேடிய மாநகராட்சி சம்மேளனம் ஆகியன இணைந்து நடாத்தும் கனேடிய நிதி உதவியின் கீழ் இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் உள்ளூர் ஆளுகைக்கு தலைமை ஏற்கக்கூடிய வகையில் பெண்களை வலுவூட்டுவதற்காக அமுல்படுத்தவென திட்டமிடப்பட்டுள்ள ஆறு வருட செயற்றிட்டம் இடம்பெறவுள்ளது.
குறித்த திட்டங்களை செயற்படுத்தும் வகையில் பிரதேச சபையின் தவிசாளர் சோபா ஜெயரஞ்சித் தலைமையில் செயற்குழு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
மேலும்,வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் சோபா ஜெயரஞ்சித் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஹேமந்தி குணசேகர ஆகியோரால் திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபைகள்
ஆறு வருட செயற்றிட்டத்தின் கீழ் அகில இலங்கை ரீதியாக தெரிவு செய்யப்பட்ட வாழைச்சேனை பிரதேச சபைக்கு பகுதி வேலைத்திட்டங்களை மேற்கொள்ள கனேடிய நிதியான முப்பதாயிரம் டொலரான இலங்கை ரூபாவாக எண்பத்தையாயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் பெருமாள் பிரதீப் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை ரீதியாக ஐம்பத்தேழு சபைகள் விண்ணப்பித்த நிலையில் ஐந்து சபைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் வாழைச்சேனை பிரதேச சபை, கம்பளை நகர சபை, ரத்னபுரி மாநகர சபைஈ மஸ்ஹெலிய பிரதேச சபை, நாத்தாண்டிய பிரதேச சபை ஆகிய சபைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் பணிப்பாளர் சபையின் உப தலைவரும், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளருமான ஏ.எம்.எம்.நௌஸாத், உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஹேமந்தி குணசேகர உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.