வடக்கின் பல பகுதிகளிலும் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுப்பு (Photos)
வடக்கின் பல பகுதிகளிலும் இன்று அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வைத்தியசாலை ஊழியர்கள், அரசியல் கட்சியினர் என பல தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா
அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியாவிவ் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இடம்பெற்றது.
மக்களை வதைக்கும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் என்னும் தொனிப் பொருளில் 2000 இற்கு மேற்பட்ட தொழிற் சங்கங்களால் நாடு பூராகவும் கதவடைப்பு போராட்டம் இன்று (06.05) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக ஒன்றிணைந்த தொழிற் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா, புதிய பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது யாழ்.வீதி ஊடாக ஹொரவப்பொத்தானை வீதியை அடைந்து அங்கிருந்து பசார் வீதி ஊடாக கண்டி வீதியை அடைந்து பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.
மட்டக்களப்பு
‘கொலைக்கார மக்களை வதைக்கும் அரசாங்கத்தினை விரட்டியடிப்போம்’ என்னும் தலைப்பில் மட்டக்களப்பில் இன்று அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் இணைந்து மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக இந்தபோராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.
ஊர்காவற்றுறை
ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு முன்னால் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்திருந்தனர்.
"மருந்துகள் இல்லாததால் சுகாதார கட்டமைப்பு சீர்குலைகிறது”, “அடக்குமுறை ஊடாக தேசிய கொள்கையை அழித்து அக்கிரம ஆட்சி செய்கின்ற அரசே மக்களின் அபிப்பிராயத்திற்குத் தலைவணங்கு”, “அரசின் அடக்குமுறையை இல்லாதொழிப்போம்" என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு அவர்கள் இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முல்லைதீவு
மக்கள் விடுதலை முன்னணியினரின் ஏற்பாட்டில் விசுவமடு பகுதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி - முல்லைத்தீவு எல்லைப் பகுதியான விசவமடு சந்தியில் குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது.
மக்கள் விடுதலை முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் மோகன் தலைமையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.







