திருகோணமலை நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுப்பு
திருகோணமலை நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் பல அபிவிருத்தித் திட்டங்கள் நகர சபையால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நகர சபையின் தவிசாளர் நாகராஜா இராசநாயகம் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை நகர அபிவிருத்தி குறித்து அவரிடம் கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
திருகோணமலை நகரை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் பாதையோரத்தில் நடைபெறும் நடைபாதை வியாபாரங்கள் நிறுத்தும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மட்டிக்களி பகுதியில் அமைந்துள்ள மீன் வியாபாரம் காரணமாக அப்பகுதி அசுத்தமாவதுடன் சுற்றுச்சூழலுக்கும் பாதகமாக அமைவது மட்டுமல்லாது வீதியோரத்தில் நடைபெறும் வியாபாரத்தினால் வீதி விபத்துக்களும் வாகன நெரிசலும் ஏற்படுவது ஒரு தொடர்கதையாக அமைகின்றது.
இதனைக் கருத்தில் கொண்டு பாதையோரத்தில் நடைபெறும் சகல வியாபாரங்களும் தடை செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை தற்சமயம் உள்ள பொருளாதார நெருக்கடியினை கருத்தில் கொண்டு அவர்கள் வியாபாரம் செய்வதற்கு மாற்று இடங்களும் இனங்காணப்பட்டுள்ளன.
அவற்றில் முதலாவது லிங்க நகர்ப் பகுதியில் நகர சபைக்குச் சொந்தமான காணியில் வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்கப்படும் எனவும், இரண்டாவதாக மின்சார நிலைய வீதியில் நகரசபை வேலை தளத்துக்கு முன்னால் உள்ள மலையருவி காணியிலும் வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும்.
அதேபோன்று என் சி வீதியில் சிறுவர் பூங்காவுக்கு அருகில் உள்ள நகரசபைக்குச் சொந்தமான காணிகளும் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படும்.
எனவே, நடைபாதை வியாபாரிகள் தமது வியாபாரத்தை மேற்கூறிய இடங்களில் செய்ய முடியும் என்பதையும், வீதியோரங்களில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும், திருகோணமலை நகர சபையின் தவிசாளர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.



