பொருளாதார ஸ்திரத்தன்மை - பணவீக்கம் பாரியளவில் வீழ்ச்சி - ஜனாதிபதி தகவல்
நாட்டில் 2022 செப்டம்பரில் 70% ஆக இருந்த பணவீக்கம் 2024 பெப்ரவரியில் 5.9% ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை 2024 ஆம் ஆண்டில் 2% - 3% பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என சர்வதேச நிதி நிறுவனங்கள் கணித்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றிய விசேட உரையின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
பணவீக்கம்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய வங்கி மற்றும் அரசாங்கம் ஆகியன ஒருங்கிணைந்து மேற்கொண்ட நுண் பொருளாதார கேள்வி முகாமைத்துவ முன்முயற்சியின் காரணமாக 2022 செப்டம்பரில் 70% ஆக இருந்த பணவீக்கம் 2024 பெப்ரவரியில் 5.9% ஆக வீழ்ச்சியடைந்தது.
இதன் காரணமாக சிறு மற்றும் மத்திய தொழில்முயற்சியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்கி 30 வீதத்தை தாண்டிய வரி வீதத்தை 2023 இல் 10 சதவீதத்தை விட குறைவான தொகைக்குக் கொண்டுவந்துள்ளது.
அத்துடன், 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டு அரச வருவாயை 50 சதவீத்திற்கும் மேல் அதிகரிக்க முடிந்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம் 2024 ஆம் ஆண்டில் 2% - 3% பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என சர்வதேச நிதி நிறுவனங்கள் கணித்துள்ளனர்
எனினும் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் சிலர் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் விமர்சித்து வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
“இன்று நமது நாடு ஓரளவு பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். எனினும், இதனை ஏற்றுக்கொண்டதாக காட்டிக் கொள்ளாமல், நாம் முன்னெடுத்துள்ள வேலைத் திட்டத்தை விமர்சிப்பவர்களும் இருக்கின்றனர்.
சிறந்தவொரு படிப்பினை
பொருளாதாரம் வலுவாக இருப்பதாகத் தோன்றினாலும், மக்கள் அதை உணரவில்லை என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர். மக்கள் மீது தேவையற்ற வகையில் வரிச் சுமையை அதிகரித்துள்ளதாகவும் கூறுகின்றனர். மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலைகள் தேவையற்ற வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
பொதுவாக, பூவைக் காயப்படுத்தாமல் தேன் எடுப்பதைப் போல் மக்களைத் துன்புறுத்தாமல் வரி வசூலிக்க வேண்டும் என்ற பழமொழி உண்டு.
ஆனால் அந்த நடைமுறையை நாங்கள் பின்பற்றவில்லை என்று விமர்சிக்கின்றனர். எனினும், இவ்வாறு விமர்சிப்பவர்கள் ஒரு விடயத்தை மறந்துள்ளனர். பூக்களை நசுக்கித் தேன் எடுக்கும் சந்தர்ப்பங்களும் உள்ளன என்பதை அவர்கள் மறந்துள்ளனர். இது நமக்கு சிறந்தவொரு படிப்பினை. ஒரு சாதாரண சூழ்நிலையில், பூக்களை நசுக்காமல் தேன் எடுக்க முடிந்தாலும், இருளில் பயணிக்கும்போது அவ்வாறு செய்ய முடியாது.
இன்று நாமும் இருளில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். கடந்த காலத்தில் நாம் பொருளாதார தொங்கு பாலத்தில் பயணிக்க நேரிட்டது. இருளில் பயணிக்க நேரிட்டது.
இவ்வாறான ஆபத்தான நிலை எங்களுக்கு ஏன் ஏற்பட்டது? எமது பொருளாதாரம் ஏன் வங்குரோத்தடைந்தது? கடந்த கால அரசுகள் தொலைநோக்குப் பார்வையற்ற முடிவுகள் எடுத்தமை ஒரு காரணமாகும். அரசின் பல சாதகமான வேலைத் திட்டங்களை பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்த்து, சீர்குலைத்ததும் மற்றொரு காரணமாகும்.
இந்தக் கட்சிகள் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தின. இதனால் நாட்டுக்கு முறையான, பரிபூரணமான பொருளாதாரத் திட்டமொன்று தேவைப்பட்டது. இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்த நாம் பல சந்தர்ப்பங்களில் முயற்சித்தோம்.
எனினும், இவ்வாறான திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வாய்ப்புக் கிடைக்காமல் போனது. 1989 ஆம் ஆண்டு, கலாநிதி சந்திம விஜேபண்டார, புத்தசரண பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியை மேற்கோள் காட்ட விரும்புகின்றேன்.
அக்கட்டுரையில் புத்தர் உபதேசித்த குடதந்த சூத்திரத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். “திட்டமில்லாத வளர்ச்சி சாத்தியமற்றது. திய நிகாயாவின் குடதந்த சூத்திரம், வளர்ச்சிக்கான திட்டங்களின் அவசியத்தை விளக்குகிறது.
வளர்ச்சியடையாத நாட்டில் பாட்டாளி வர்க்கம், அரசுக்கு எதிராக நெருக்கடியை ஏற்படுத்தும்போது, அரசாங்கம் ஒரு திட்டத்தின் மூலம் நாட்டை எவ்வாறு மேம்படுத்தியது என்பதை இது காட்டுகிறது. இது அரசின் அடிப்படைப் பொருளாதாரத் திட்டம்.
இது வெற்றியடைந்ததாகவும், இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக மட்டுமன்றி, மதிப்புகளின் அடிப்படையில், நல்ல சமூக உறவுகளுடன், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்தனர் என்று இந்தச் சூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய அறிவியல் மற்றும் திட்டமிட்ட வழியை நாங்கள் இதற்கு முன்னர் பின்பற்றவில்லை.
நாட்டை மீட்கும் சவால்
சில குழுக்கள் அத்தகைய வேலைத் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கவில்லை. இதனால் நாட்டிற்கு என்ன நடந்தது என்பதை அனைவரும் அறிவர். நாடு வங்குரோத்தடைந்தது. கடனைச் செலுத்த முடியாமல் போனது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் போனது. சாதாரண குடிமகன் முதல் பெரிய தொழிலதிபர் வரை அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வரிசைகளின் யுகம் ஏற்பட்டது. பலர் தொழில்களை இழந்தனர். தொழில்களும் வணிகங்களும் சரிந்தன. சிலர் நாட்டை விட்டு வெளியேறினர். நாடு முழுவதும் தீப்பற்றி எரிந்தது. பொருளாதார நரகத்தில் நாடு விழுந்தது.
இந்த நேரத்தில் நாடு அராஜகமாக மாறியது. ஆட்சி நிர்வாகம் சீர்குலைந்தது. பொருளாதார ரீதியில் மட்டுமன்றி சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடுமையான ஆபத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. இந்த நிலைமையில் இருந்து நாட்டை மீட்கும் சவாலை யாரும் ஏற்க முன்வரவில்லை.
அழைக்கப்பட்ட அனைவரும் மறுத்துவிட்டனர். தீயில் குதித்து தீயை அணைக்கும் தைரியம் யாருக்கும் இல்லை. ஆனால் நாட்டுக்காக அந்த சவாலை நான் ஏற்றுக்கொண்டேன். தீயின் நடுவே சென்று தீயை அணைக்க ஆரம்பித்தேன். அந்த அயராத முயற்சியின் பலனை இன்று நாடு முழுவதும் அனுபவித்து வருகிறது. இந்த நேரத்தில், அந்த மாபெரும் முயற்சியில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவரையும் நன்றியுடன் நினைவுகூர்கின்றேன்.
நாங்கள் ஒரு சிறந்த, பயணத் திட்டத்திற்கு அடித்தளமிட்டோம். சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பொருளாதாரத் திட்டத்தைத் தயாரித்தோம். அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியதன் விளைவாக, நாடு நாளுக்கு நாள் இயல்பு நிலைக்கு வந்தது. அழுத்தம் தணிந்தது. துயரங்கள் மெல்லக் குறைய ஆரம்பித்தன. அதைத் தெளிவுபடுத்தும் சில பொருளாதாரக் குறிகாட்டிகளை இந்த அவையில் முன்வைக்க விரும்புகின்றேன்.
2022 முதல் 2023 இரண்டாம் காலாண்டு வரை 6 காலாண்டுகளுக்கு தொடர்ந்து சுருங்கிய நமது பொருளாதாரம், 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இருந்து புத்துணர்ச்சிப் பெற ஆரம்பித்தது. இந்த ஆண்டு 2 முதல் 3 சதவீத வளர்ச்சியை எட்ட முடியும் என்று சர்வதேச நிதி நிறுவனங்கள் கணித்துள்ளன. 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் அரச வருமானத்தை 50 சதவீதத்திற்கும் மேல் அதிகரிக்க முடிந்தது. கடந்த ஆண்டு முதன்மைக் கணக்கில் உபரித் தொகையைப் பெற முடிந்தது.
இதனால், மூன்று, நான்கு ஆண்டுகளாக அரசுக்கு சேவை வழங்கிய ஒப்பந்ததாரர்களுக்கு அனைத்து நிலுவைத் தொகையையும் முடித்துள்ளோம். 2022 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில், அரசுக்குச் சொந்தமான 52 பெரிய நிறுவனங்கள் மொத்தமாக ரூ.720 பில்லியன் நட்டத்தை எதிர்கொண்டது.." - என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
