அரச சார்பற்ற நிறுவனங்களின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்(Photos)
அரச சார்பற்ற நிறுவனங்கள் தாம் செயற்படுத்தும் வேலைத்திட்டங்களை தாம் விரும்பிய அடிப்படையில் செயற்படுத்தாமல் துறைசார் நிறுவனங்களை தொடர்புபடுத்தி செயற்படுவதன் மூலம் அத்திட்டங்களால் பெறப்படும் பிரதிபலன்களை உயர் மட்டத்தில் அடைய முடியும் என திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி. எச். என்.ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.
பொருத்தமான பயனாளிகளை தெரிவு செய்தல்
திருகோணமலை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் இன்று (28.04.2023) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அரச சார்பற்ற நிறுவனங்கள் சில தம் வியாபார பதிவை வைத்துக்கொண்டு செயற்படுகின்றார்கள். அவ்வாறான நிறுவனங்கள் முறையான பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் உதவிகளினை வழங்கும் போது பொருத்தமான பயனாளிகளை தெரிவு செய்தல் வேண்டும்.
பயனாளிகள் தெரிவின்போது உரிய பிரதேச செயலகத்தோடு இணைந்து குறித்த செயற்பாட்டினை மேற்கொள்ள வேண்டும்.
அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு பாராட்டு
அவசரகால நிலையின்போது மக்களுக்குறிய நிவாரணங்களை வழங்குவதற்கு மாவட்டத்தில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்கிய ஒத்துழைப்பை பெரிதும் பாராட்டுவதாகவும், உணவுப்பாதுகாப்பு மற்றும் விவசாய அபிவிருத்தி் குறித்தும் அவதானத்தை செலுத்தி செயற்படுமாறு அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.
2023 முதல் காலாண்டில் அரச சார்பற்ற நிறுவனங்கள் நடைமுறைப்படுத்திய வேலைத்திட்டங்கள் மற்றும் முன்னோக்கிய வேலைத்திட்டங்கள் குறித்தான முன்வைப்புக்களும் இதன்போது உரிய அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், அரச சார்பற்ற நிறுவன
ஒருங்கிணைப்பதிகாரி ஏ.எம்.எஸ்.டி.அத்தநாயக்க, அரச சார்பற்ற நிறுவனங்களின்
பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.