மீண்டும் நாட்டை விட்டு வெளியேறும் தொழில் நிபுணர்கள்!
தொழில் நிபுணர்கள் மீண்டும் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியர்கள், பொறியியலாளர்கள், கால்நடை வைத்தியர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட தொழில்வாண்மையாளர்கள் மீண்டும் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடவடிக்கை
பயிற்சியை பூர்த்தி செய்த வைத்தியர்கள் 2,000 பேர், செவிலியர்கள் 4,000 பேர், பொறியியலாளர்கள் 2,000 பேர் தற்போது வெளிநாட்டுக்குச் செல்ல தேவையான ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
மத்திய அரசின் மருத்துவ சேவைகள் மற்றும் மாகாண சபை மருத்துவமனைகளில் வைத்தியர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை மிக கடுமையாக ஏற்பட்டுள்ளதுடன், கடந்த மூன்று ஆண்டுகளாகவே புதிய ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படவில்லை என தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.
அத்துடன், அரசாங்க கட்டுமான துறைகளிலும் பொறியியலாளர்கள் பற்றாக்குறை தீவிரமாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரச்சினைக்கு தீர்வு காண..
அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளவை தொலைதூர மற்றும் மிகுந்த பிரச்சினைகளைக் கொண்ட மாகாண சபை மருத்துவமனைகளாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
இவற்றில் வைத்தியர்களும் செவிலியர்களும் கடுமையாக பற்றாக்குறையுடன் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண சுகாதார அமைச்சு எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
