வவுனியாவில் வெதுப்பகத்தின் உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை
வவுனியா (Vavuniya) - வைரவபுளியங்குளம் பகுதியில் உணவகத்துடன் கூடிய வெதுப்பகம் ஒன்றின் கழிவு நீரை சீரற்ற வகையில் வீதிக்கு வெளியேற்றிய உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுகப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, புகையிரத நிலைய வீதி, வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றுடன் கூடிய வெதுப்பகத்தின் கழிவு நீரானது தாங்கி ஒன்றிற்கு சென்று அங்கிருந்து முறையான ஒழுங்கமைப்பு இன்றி வாய்கால் ஊடாக வீதிக்குவந்துள்ளது.
வெதுப்பகத்தின் கழிவு நீர் முகாமைத்துவம்
இவ்வாறு தொடர்ச்சியாக வந்த நிலையில் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதுடன், அருகில் வீதியோரமாக மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடுபவர்களும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இதனையடுத்து, மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் பல தடவை வெதுப்பக கழிவு நீரை வீதிக்கு விட வேண்டாம் எனக் கூறியும் அவர்கள் கவனம் செலுத்தாமையால் மரக்கறி வியாபார நிலைய உரிமையாளர் குறித்த கழிவு நீரை அள்ளி வெதுப்பகம் முன்பாக ஊற்றியுள்ளதுடன், இது தொடர்பில் வவுனியா நகரசபை சுகாதார பரிசோதகர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த சுகாதார பரிசோதகர்கள் வெதுப்பகத்தின் கழிவு நீர் முகாமைத்துவத்தை பார்வையிட்டதுடன், அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை வழங்கி குறித்த கழிவு நீர் முகாமைத்துவத்தை சீர் செய்து விட்டு வெதுப்பகத்தை திறக்குமாறு கூறி அதனை பூட்டியுள்ளனர்.
இதன்பின்னர், குறித்த கழிவு நீர் வெளியேற்றும் செயன்முறை சீர் செய்யப்பட்டதுடன், சுகாதார பரிசோதகர்களின் அனுமதியுடன் குறித்த வெதுப்பகம் மீளவும் திறக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |