நளின் பண்டார ஜயமஹாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை
நாடாளுமன்ற அமர்வுகளை சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சபாநாயகரின் உத்தரவை மீறி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் அண்மையில் அமர்வுகளின் நேரடிப்பதிவை சமூக ஊடகம் ஒன்றில் மேற்கொண்டார்.
இதன் மூலம் குறித்த உறுப்பினர் நிலையியற் கட்டளை 91 ஐ மீறியுள்ளார். அதுமட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தம்முடன் உடல் ரீதியான சண்டைகளுக்கு சவால் விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல்
இந்த நிலையில் எதிர்க்கட்சியினரின் இதுபோன்ற செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது. அவர்களின் நடத்தையால் தமது நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜயமஹா, நிலையியற் கட்டளை 91 என்பது சக நாடாளுமன்ற உறுப்பினரை அவமதிப்பதையே குறிக்கின்றது என்றும் குறிப்பிட்டார். அது சபை நடவடிக்கைகளை நேரடியாக பதிவு செய்வதை குறிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சில கழுதைகளுக்கு நிலையியற் கட்டளைகளைப் பற்றி தெரியாது. வேறு எதனையோ பேசுகின்றார்கள். அதற்கு அவர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் நளின் பண்டார ஜயமஹா குறிப்பிட்டுள்ளார்.