கிழக்கில் தாதியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு
கிழக்கு மாகாண தாதியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரட்ணசேகர உறுதியளித்துள்ளார்.
ஆளுநருக்கும் அகில இலங்கை தாதியர் சேவைகள் சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று, நேற்று (12) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, பல்வேறு கோரிக்கைகளை, தாதியர் சங்கத்தினரால் முன்வைக்கப்பட்டன.
பொது விடுமுறை தினங்களுக்கு சேவை கொடுப்பனவு சம்பந்தமாக பிரதம செயலாளரின் அனுமதி இன்னும் கிடைக்காமல் இருப்பது தொடர்பாகவும், 2021 ஆம் ஆண்டில் இருந்து, கிழக்கு மாகாணத்தில் வெற்றிடமாக உள்ள தாதியர் பரிபாலகர்ளுக்கான (தாதியர் விசேட தரம் பெற்றவர்கள்) நியமனங்களை வழங்குவதற்கு கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதன்போது தாதியர்சங்கதினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய கோரிக்கைகள்
மேலும், வெளி மாவட்டத்திலிருந்து வருகின்ற தாதியர்களின் சேவையினை தொடர்ச்சியாகவும் திருப்திகரமானதாகவும் பெற்றுக் கொள்வதற்கு தேவையான விடுதி வசதிகள் தொடர்பாகவும், சம்பள நிலுவைகள் மற்றும் மேலதிக நேரம் கொடுப்பனவு இன்னும் பூரணப்படுத்தாமல் இருப்பது குறித்தும், தாதியர் சங்கத்தினர் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
அத்தோடு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட இருக்கின்ற தாதியர் நியமனத்தின் போது, கிழக்கு மாகாணத்தில் தாதியர் பற்றாக்குறையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ஆளுநரை கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி. ஏ. சி. என். தலங்கம, ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ், மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் டி.ஜி.எம். கொஸ்தா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


