இலங்கையின் தலைநகரில் தமிழ்மொழியின் நிலை: இந்த நிலை மாற்றப்படுமா
இலங்கையின் தலைநகரமாக விளங்கும் கொழும்பில் தமிழ் மொழி எல்லா அரசு சார்பு நிலையங்களிலும் நடைமுறையில் பேணப்படுவதாக உணர முடிகின்றது என்ற கருத்தியல் இருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
மொழிப் புறக்கணிப்பு என்ற குற்றச் சாட்டுக்களை தொடர்ந்து தமிழ் அரசியல் சார்பு செயற்பாட்டாளர்கள் முன்வைத்து குற்றம் சாட்டி வருவதனையும் இங்கே நோக்க வேண்டும்.
எங்கும் எதிலும் தமிழும் வேண்டும் என்றால் தமிழ் அரசியல் தலைமைகள் தங்களின் நோக்கம் சார்ந்து இயங்கப் பழகிக்கொள்ள வேண்டும்.
வீதியிலுள்ள பெயர்ப் பலகையில் தமிழ்
கொழும்பும் அதனை சார்ந்த பகுதிகளும் வீதிகளை அடையாளம்கண்டு கொள்வதற்காக வைக்கப்படும் பெயர்ப் பலகைகளில் மும்மொழித் திட்டம் பேணப்பட்டு வருகின்றமையை அவதானிக்கலாம்.
சிங்கள மொழியோ அல்லது ஆங்கில மொழியோ தெரியாத ஒருவரால் தமிழ் மொழி மட்டும் கொண்டு கொழும்பின் பாதைகளை அறிந்து கொள்ள முடியும் என யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு தொழில் நிமித்தம் பயணம் செய்து வரும் ஒருவருடன் கொழும்பில் தமிழ் மொழியின் பயன்பாடு எப்படியிருக்கிறது என வினவிய போது தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
முதலில் சிங்கள மொழியில் பெயரும் அடுத்து அதன் கீழ் தமிழ்மொழியில் பெயரும் அதனையடுத்து அதன் கீழ் ஆங்கில மொழியில் பெயருமாக வீதிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதனை அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் தலைநகரில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதாக கருதுவதை விட முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என்ற நோக்கில் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தினால் இலங்கையின் எல்லா இடங்களிலும் தமிழ் மொழி பயன்பாட்டுக்கு வந்துவிடும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கையில் தமிழ் மொழியையும் சிங்கள மொழியையும் தாய் மொழியாக கொண்ட மக்கள் வாழ்கின்றனர். ஆங்கிலம் என்பது இலங்கைக்கு வரும் வேற்று மொழியினர் புரிந்து கொள்வதற்காக என கொழும்பு வாழ் சிங்கள அரசு அதிகாரி ஒருவரிடம் கருத்துக் கேட்ட போது குறிப்பிட்டார்.
வேறொரு நாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் ஒரு சுற்றுலாப் பயணிக்கு தமிழோ சிங்களமோ தெரியாதிருந்தால் உலகப் பொது வழக்காக இருக்கும் ஆங்கிலம் உதவும் என்று நினைக்கும் எங்கள் நாட்டு அரசாங்கத்திற்கு இலங்கையர்களுக்கு புரிந்து கொள்ளும் வகையில் இருமொழிப்பெயர்களை பயன்படுத்துவதில் என்ன இடர்பாடு இருந்து விடப்போகிறது என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தமையும் நோக்கத்தக்கது.
பொது இடங்களில் தமிழ்
கொழும்பில் உள்ள பேருந்து நிலையம்,புகையிரத நிலையம்,விமான நிலையம் என எல்லா பொது இடங்களில் தமிழ் மொழியில் குறிப்புக்கள் இருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
கொழும்பில் உள்ள அரசு அலுவலகங்களில் கூட தமிழ்மொழி அதிகாரிகளும் கடமையாற்றுவதனையும் அவதானிக்க முடிகின்றது.
இலங்கையின் எப்பாகத்திலும் தமிழ் மொழியினை பயன்படுத்துவதில் இடர்கள் இருப்பது என்றால் அது தமிழர் தரப்பு விட்ட தவறாகவே இருக்கும் என கொழும்பு வாழ் தமிழர் ஒருவர் தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
பல இயல்புகளைக் கொண்ட தனிநபர்களின் கூட்டமாக வாழும் போது முரண்பட்ட விருப்பத் தெரிவுகள் இருக்கத்தான் செய்யும்.ஆனாலும் பொருத்தமான செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது அதிகமான கடினங்களை சரி செய்து கடந்து விடலாம்.
கொழும்பில் வீதிகளிலும் பொது இடங்களிலும் அரச சேவைகள் வழங்கப்படும் இடங்களிலும் என தமிழிலும் பெயர்கள் இருக்கும் போது தமிழர்களின் வியாபார நிலையங்களில் ஆங்கிலத்தில் மட்டும் பெயர்கள் குறிக்கப்படுதலும் உண்டு.
இது கொழும்பில் மட்டுமன்றி தமிழர்களின் வாழிடத் தொடர்சி பேணப்படும் வடக்கு கிழக்கிலும் இருக்கிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
பேருந்துகளிலும் தமிழ்
கொழும்பில் பயன்பாட்டில் இருக்கும் பொதுப்போக்குவரத்தினை வழங்கும் எல்லா பேருந்துகளிலும் அறிவித்தல் பெயர்ப்பலகை மும்மொழிகளிலும் இருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
இந்த இயல்பினால் குறித்தவொரு இடத்திற்கான பேரூந்தினை இனம் கண்டு கொள்வதற்காக மற்றொருவருடைய உதவி தேவைப்படுவதில்லை என முல்லைத்தீவில் இருந்து கொழும்பு வந்திருந்த வயதான அம்மா ஒருவர் குறிப்பிட்டார்.
அரசு பேருந்துகளிலும் சரி தனியார் பேருந்துகளிலும்சரி தமிழில் இடங்களின் பெயர்களை குறிப்பிடும் போது உச்சரிப்பு பிழை தோன்றும் வண்ணம் எழுத்துப் பிழைகளோடு தமிழ் பெயர்கள் இருப்தும் கவலைக்குரிய விடயமாகும்.
இது தொடர்பில் பேருந்து நடந்துநர்களுடைய கருத்துக்களையும் கேட்ட போது அவர்கள் சுட்டிக்காட்டிய தவறினை ஏற்றுக்கொண்டனர்.
தவறை சரி செய்வதற்கு தமிழ் நன்கு தெரிந்தவர்கள் சுட்டிக்காட்டும் போது திருத்திக்கொள்ள முடியும் என்ற கருத்தினை ஒரு நடத்துநர் முன்வைத்தார்.
உரிய அலுவலகங்களில் இருப்பவர்கள் தவறுகளை சரி செய்வதில் கூடிய கவனம் எடுத்தால் தவறில்லாத பெயர்ப்பலகை தமக்கு கிடைக்கும் எனவும் மற்றொருவர் குறிப்பிட்டிந்தார்.
எங்கும் எதிலும் தமிழ்
இலங்கையில் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழியும் இருக்கின்றது. தமிழ் மொழி காலத்தால் பழம்பெரும் பெருமைக்குரியதாக இருக்கின்றது.
தமிழை படிப்பதும் தமிழை பேசுவதும் பெருமையான விடயமாக வேற்று மொழியினர் கருதி தமிழை பயின்று பேசி வருகின்றமையும் நோக்கத்தக்கது.
தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் இடையே தமிழ் மொழி வழக்கொழிந்து போவதும் கூட இருக்கின்றதாக கொழும்புவாழ் தமிழறிஞர் ஒருவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் எங்கும் எதிலும் தமிழ் மொழி என்ற நிலை வர வேண்டும் என்றால் முதலில் தமிழில் தமிழ் அரசியலாளர்கள் புலமை பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
அவர்களுக்கு தமிழின் பெருமை தெரிந்திருக்க வேண்டும்.ஆனாலும் இலங்கையில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய எந்தவொரு தமிழறிஞர்களும் இருப்பதாக தெரியவில்லை.
குறைந்தது தமிழ் மொழி மீது அளவற்ற மரியாதை கொண்டவர்களாக அவர்கள் இருக்கும் போது மும் மொழிப் பயன்பாட்டை நடைமுறைப்படுத்த முயல்வார்கள்.
அரச சேவைக்கு உள்ளீர்க்கப்படுதலுக்கான கட்டாய தகைமைகளில் மும்மொழி புலமையை நடைமுறைப்படுத்தல் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தலாம் என அவர் மேலும் குறிப்பிட்டார் .
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Uky(ஊகி) அவரால் எழுதப்பட்டு, 09 January, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.