தேயிலை தொழிலாளியாக மாறிய பிரியங்கா காந்தி!
அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் ஒன்றுக்காக சென்றிருந்த காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, தேயிலை தொழிலாளியாக மாறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் ஆளுகையின் கீழ் இருக்கும் அசாம் மாநிலத்தில் எதிர்வரும் 27ம் திகதி முதல் ஏப்ரல் 6ம் திகதி வரையில் மூன்று கட்டமாக தேர்தல் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், அசாம் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சி தீவிர பிரசார நடவடிக்கையில் ஈடுட்டுள்ளது.
அந்த கட்சியின் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளார். இதன்படி, அப்பர் அசாம் பகுதியில் பிஸ்வநாத் சாரியாலி மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டத்துக்கு சென்றார்.
அங்கு அவர் தேயிலை தோட்ட தொழிலாளர்களை சந்தித்து பேசினார். அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். அவர்களுடன் தானும் ஒரு தொழிலாளியாக மாறி தேயிலை பறித்தார்.
அந்த தொழிலாளர்களிடம் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். அவரது எளிமை, வாக்காளர்களை கவர்ந்தது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரியங்கா காந்தி,
“தேயிலை தொழிலாளர்களும், அவர்களது வாழ்க்கையும் எளிமைக்கும், உண்மைக்கும் உதாரணம். நான் உங்கள் உரிமைகளுக்காக போராடுவேன். ஒவ்வொரு மன்றத்திலும் உங்களுக்காக குரல் கொடுப்பேன்.
தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அசாம் மற்றும் நாட்டின் சொத்துகள். காங்கிரஸ் கட்சி எப்போதுமே உங்களை காக்கவும், மேம்படுத்தவும் போராடும்” என தெரிவித்துள்ளார்.