நிறுவனங்களை மறுசீரமைப்பதில் தனியார் மயமாக்கல் மட்டும் தீர்வல்ல : சஜித் தெரிவிப்பு
நாட்டிலுள்ள நிறுவனங்களை மறுசீரமைக்கும் போது தனியார் மயமாக்கல் மட்டுமா ஒரே தீர்வாக அமைகிறது என்பது குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டிய கட்டாய நிலைக்கு நாம் தள்ளப்பட்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான லெஸ்லி தேவேந்திரவின் 60 வருட தொழிற்சங்க வாழ்வை முன்னிட்டு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (29) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் இருப்பு
மேலும் தெரிவிக்கையில், “ஒரு நாடாக, தனியார் மயமாக்கல் என்ற பெயரில் இலாபம் ஈட்டும் பொது நிறுவனங்களை எடுத்த எடுப்பில் தனியார் மயமாக்குவதா அல்லது அதை விடுத்து பல்வேறு புதிய தொழில் முயற்சியாண்மை எண்ணக்கருக்களைப் பயன்படுத்தி தற்போது ஈட்டிவரும் இலாபத்தை விட அதிக இலாபத்தை ஈட்டும் முறைக்குள் பிரவேசிப்பதா உகந்தது என்பது குறித்து நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.
வரி செலுத்துவோரின் நிதியை தேசிய நலனுக்கு சாதகமாக இலாபமீட்டுத் தராத நிறுவனங்களுக்கு விருப்பப்படி நிதியை இறைப்பதன் மூலம் ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியாது.
நமது நாட்டிற்கு ஏற்ற வேலைத்திட்டத்தை உருவாக்கி, நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இலாபகரமான நிலைக்கு இட்டுச் செல்ல வேண்டும். தொழிலாளர் வர்க்கத்திற்கு ஏதேனும் பாரபட்சங்கள் ஏற்படுமாக இருந்தால் புதிய திட்டங்கள் மற்றும் புதிய தீர்வுகளுக்கு செல்ல வேண்டும்.
இந்நிலையில், நாட்டின் இருப்பு பொருளாதார செயல்முறையை அடிப்படையாகக் கொண்டமைகிறது.
பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்படுத்தும் செயல்முறைக்கு உலகில் 4 முக்கியமான அங்கீகரிக்கப்பட்ட அம்சங்கள் உண்டு. அதாவது நிலம், மூலதனம், தொழிலாளர்கள் மற்றும் முயற்சியாண்மை எனும் நான்கு அம்சங்கள் அவையாகும்.
தொழிலாளர் வர்க்கத்தின் பங்களிப்பு
லெஸ்லி தேவேந்திர ஐக்கிய மக்கள் சக்தியைப் போல நட்பு வட்டார முதலாளித்துவத்தை கடுமையாக நிராகரிப்பதோடு செல்வம், வளங்கள் மற்றும் வருமானம் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று கருதுகிறார்.
ஒரு நாட்டின் உற்பத்திச் சங்கிலியில் செல்வத்தை உருவாக்குவதில் தொழிலாளர் வர்க்கத்தின் பங்களிப்பு பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது. இது நமது நாட்டில் மட்டுமல்ல உலக வரலாற்றிலும் நடந்து வந்த ஒரு விடயமாகும்.
தொழிலாளர்களின் உழைப்பு செல்வத்தை உருவாக்குவதற்குப் பங்களித்த பிறகு முதலாளித்துவம் மனிதாபிமான பார்வையைக் கொண்டிருக்காவிடின் அது உருவாக்கும் வளங்களும், செல்வமும் உயர் வர்க்கத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகவே அமைந்து விடும். இது இவ்வாறு அமைந்து விடக்கூடாது.
இந்த முதலாளித்துவம் மனிதாபிமானம் கொண்ட முதலாளித்துவமாக அமைந்திருக்க வேண்டும். முதலாளித்துவ அமைப்பில் தவிர்க்க முடியாத இடைவெளி உருவாக்கப்படுகிறது. இங்கு தான் சமூக ஜனநாயகம் முக்கியமானது.
இங்கு
உருவாக்கப்படும் செல்வம் நீதி, நியாயம் மற்றும் சமத்துவத்தை அடிப்படையாக்
கொண்டு சமூக ஜனநாயக கொள்கையைப் பின்பற்றி, பலனானது சகலருக்கும் சமமாக
சென்றடையும் வழிவகைகளை தன்னகத்தே கொண்ட பல வெற்றிகரமான நாடுகள் உலகில்
இருக்கின்றன" என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |