திருகோணமலையில் அபகரிக்கப்படும் தனியார் நிலங்கள்! கவலை வெளியிட்டுள்ள மக்கள்
திருகோணமலை (Trincomalee) மாவட்ட பகுதிகளில் தனியார் நிலங்களை அபகரித்து விவசாய பூமிகள் இல்லாமல் ஆக்கப்பட்டு மக்களை குடியேற்றங்களிலிருந்து துரத்தியடிக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் விவசாய காணிகளை அபகரித்து அந்நிய நாடுகளுக்கு விற்க வேண்டாம் என கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று 28ஆம் திகதி அன்று இடம்பெற்றது.
1972ஆம் ஆண்டு பிரதமராக இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆட்சி காலத்தில் அப்போதைய பிரதியமைச்சராக செயற்பட்ட மறைந்த மர்ஹூம் ஏ .எல். அப்துல் மஜீத்தினால் முத்து நகர் பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டது.
விவசாய நடவடிக்கைகள்
1984இல் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு, ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியின் போது துறைமுக அமைச்சராக இருந்த லலித் அதுலத் முதலியினால் குறித்த முத்து நகர் காணி துறைமுக அதிகார சபைக்கு சொந்தமானது என வர்த்தமாணி அறிவித்தல் விடுக்கப்பட்டது.
ஆனால், அந்த மக்களுக்கு இதுவரை காணி உரித்துப் பத்திரம் வழங்கப்படவில்லை எனவும் துறைமுக அதிகார சபையினர் தங்களை தொடர்ந்தும் அச்சுறுத்துவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
மேலும், அவர்கள் 1972ஆம் ஆண்டில் இருந்து நெற்செய்கை உள்ளிட்ட மேட்டு நிலப் பயிர்ச்செய்கை விவசாயங்களை மேற்கொண்டிருந்து தற்போது வரை விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இங்கு மூன்று விவசாய குளங்கள் காணப்படுகிறன. சுமார் 788 ஏக்கர் விவசாய நிலங்களும் காணப்படுகிறன. அது மாத்திரமன்றி, 300இற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் தங்களின் அன்றாட ஜீவனோபாயமாக விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர்.
துறைமுக அதிகார சபையினர் எங்கள் காணியை பெற்று இந்தியாவுக்கு தாரை வார்க்க பார்க்கின்றனர். இதனை அரசாங்கம் நிறுத்தி ஜனாதிபதி எங்கள் காணிகளுக்கான உரித்து படிவங்களை வழங்க வேண்டும். விவசாய குளங்கள் புனரமைக்கப்பட வேண்டும் எனவும் அந்த மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மக்களின் போராட்டங்கள்
'விற்காதே விற்காதே காணிகளை விற்காதே', 'விவசாய நிலங்களை மீட்டுத் தா', 'நாட்டின் முதுகெலும்பு விவசாயம்', 'துறைமுக அதிகார சபையே விவசாய காணிகளை அபகரிக்காத போன்ற வாசகங்களை உள்ளடக்கிய வகையில் பதாகைகளை ஏந்தியவாறு குறித்த முத்து நகர் விவசாய பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் சுமார் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். இப்படியாக மக்களின் விவசாய பூமிகள் துறைமுக அதிகார சபையினரால் பறிக்கப்பட்டு இந்தியாவுக்கு நீண்ட கால குத்தகைக்காக வழங்கப்படவுள்ளதாக அறிந்து மக்கள் போராட்டம் வெடிக்கத் தொடங்கியுள்ளது.
இப்பகுதியில் தகரவெட்டுவான் விவசாய குளம் இருந்த போதிலும் அதனை கமநல அபிவிருத்தி திணைக்களம் ஊடாக குளம் புனரமைப்பு செய்யப்படவிருந்த போதிலும் இலங்கை துறைமுக அதிகார சபையினர் அதனை தடுத்து நிறுத்தினர். இதனால் பல ஏக்கர் வயல் நிலங்களில் செய்கையில் ஈடுபட முடியாமல் பல இடர்களை அப்பகுதி விவசாயிகள் எதிர் கொண்டனர்.
இது தொடர்பில் அப்பகுதி குடும்ப பெண் ஒருவர், " இலங்கை துறைமுக அதிகார சபையினர் கடந்த மூன்று வருடகாலமாக எங்களது விவசாய குடியிருப்பு காணிகளுக்குள் புகுந்து எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது அச்சுறுத்துகின்றனர்.
மக்களின் குடியேற்றங்கள்
புதிய கட்டிடங்களோ விவசாய செய்கையின் போது உழுதுதல் நடவடிக்கையோ எதுவுமே செய்ய விடாது தடுத்து நிறுத்துகின்றனர். 2010, 2013, 2023களில் ஒரு கோடிக்கும் அதிகமான நிதி தகரவெட்டுவான் குள அபிவிருத்திக்காக வந்தபோது குறித்த திட்டத்தை செய்யவிடாது துறைமுக அதிகார சபையினர் தடுத்து நிறுத்தினர் இதனால் விவசாயிகளாகிய நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களது காணி எங்களுக்கு வேண்டும்" என தெரிவித்தார்.
அதேவேளை அப்பகுதி வயோதிபர் ஒருவர், "மக்கள் காணிகளை சூரையாடி உள்ளக வளங்களை அந்நிய சக்திகளுக்கு கொடுப்பதனால் அப்பகுதி குடியேற்றங்கள் பாதிக்கப்படக்கூடும். அப்பகுதி மக்களை துரத்துவதாக இருந்தால் அதை விடவும் சாதகமான காணிகள் விவசாய நிலங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.
1972ஆம் ஆண்டின் பிரதமராக இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க காலத்தில் இருந்து இங்கு வாழ்கிறோம். எங்களுக்கு காணிகளுக்கான உறுதிப் பத்திரங்கள் கூட வழங்கப்படவில்லை. விவசாயத்தை நம்பியே வாழ்கிறோம். இதனை கொண்டே குடும்பத்தின் வயிற்றுப் பசியை போக்குகிறோம். ஜனாதிபதியாக தற்போது ரணிலுக்கு மாலை அணிவித்து கைகொடுத்தவன் நான்.
எனவே, எங்களுக்கு உறுதிப் பத்திரங்களை விரைவாக பெற்றுத் தாருங்கள். துறைமுக அதிகார சபையினர் இங்கு வந்து அடிக்கடி அச்சுறுத்துகின்றனர். இதற்கு நாங்கள் அச்சப்படப் போவதில்லை எங்கள் உரிமைகளை பெற்றுத் தாருங்கள்" என தனது ஆதங்கம் வெளிப்படுத்தியிருந்தார்.
நீண்டகால எதிர்பாரப்பு
அதேவேளை, வடக்கு - கிழக்கு மாகாணங்களில் நில அபகரிப்பு என்ற நிலையில் அதிகமாக சிறுபான்மை சமூகமே பாதிக்கப்பட்டுள்ளனர். அரசுடன் இருக்கும் அரசியல் கட்சிகள் மக்கள் பிரதிநிதிகள் உட்பட எதிர் கட்சி பிரதிநிதிகள் மக்களின் காணி உரிமைகள் தொடர்பில் தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டும்.
நிம்மதியாக சுதந்திரமாக வாழ
வழியமைத்து கொடுக்க வேண்டும். தேர்தல் காலங்களில் மாத்திரம் கிராம மக்களை
சந்திக்காது, உடனுக்குடன் மக்கள் பிரச்சினைகளை ஆராய்ந்து நாடாளுமன்றில்
பேசுவதுடன் நிரந்தர தீர்வொன்றை பெற முயற்சிக்க வேண்டும் என்பதே மக்களின்
எதிர்பார்ப்பாக காணப்படுகிறது.
முத்துநகர் மக்களின் நீண்ட கால கனவை அவர்கள் வெற்றி கொள்ள வேண்டும்” என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் திருகோணமலை மாவட்ட முஸ்லிம் பிரிவுக்கான அமைப்பாளர் ராசிக் றியாஸ்தீன் கருத்து தெரிவித்தார்.
மேலும், ஏழை விவசாயிகள் வாழும் முத்துநகர் பகுதியை அந்நிய சக்திகளுக்கு வழங்கி ஏப்பமிட வேண்டாம். மின்னை உற்பத்தி செய்து மின்னை சாப்பிட முடியாது. இம் மக்களுக்கான காணி உரிமம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் காணி அமைச்சு மாவட்ட செயலகம் பிரதேச செயலகம் என பல கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் வழங்கப்பட்ட போதிலும் சாதகமான பதில்கள் கிடைக்கவில்லை.
விவசாயிகள் இல்லை என்றால் உணவு இல்லை நீங்கள் சாப்பிடும் போது விவசாயிகளின் ஞாபகம் உங்களுக்கு வரும். ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர்கள். காணிகளுக்கான உரித்துப் பத்திரங்களை வழங்குங்கள் என ஜனாதிபதியை கோருகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனவே, மக்களுடைய உரிமைகளை அவர்களுக்கு அரசாங்கம் வழங்க வேண்டும். நில அபகரிப்புக்களை மேற்கொள்ளாது துறைமுக அதிகார சபை இதனை விடுவித்து உரித்து பத்திரங்களை வழங்க வேண்டும் எனவும் அந்த மக்கள் எதிர்பார்த்து காத்து நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |