மட்டக்களப்பு நீதிமன்ற சிறைக்கூடத்தில் கைதி ஒருவர் உயிரை மாய்க்க முயற்சி
மட்டக்களப்பில் பல திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவர் நீதவான் நீதிமன்ற கைதிகள் கூட்டிற்குள் தவறான முடிவெடுக்க முயற்சித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவமானது இன்றையதினம்(20.7.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக குறித்த நபர் கடந்த வருடம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார்.
கைது
இதனையடுத்து, வழக்கிற்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தலைமறைவாகி வந்துள்ளதையடுத்து நீதிமன்ற பிடியாணை பிறப்பித்ததையடுத்து கடந்த 13 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து யாழ் பொலிஸார் கைது செய்து மட்டக்களப்பு நீதிமன்றில் கடந்த 15 ஆம்திகதி முற்படுத்தினர்.

இதனையடுத்து அவரை 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதையடுத்து மட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
இந்த குறித்த நபரை வழக்கு விசாரணைக்காக சம்பவ தினமான இன்று திங்கட்கிழமை (20) காலையில் சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்துவரப்பட்டு நீதிமன்ற சிறைக் கைதிகள் கூட்டில் அடைக்கப்பட்டார்.
விசாரணை
இதனை தொடர்ந்து குறித்த நபரை திறந்த நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான் அவரை தொடர்ந்து எதிர்வரும் 3ம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதையடுத்து அவரை நீதிமன்ற சிறைக்கூடத்தில் அடைத்தனர்.

இந்த நிலையில் தொடர்ந்து திறந்த நீதிமன்றம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது பிற்பகல் 3.00 மணியளவில் நீதிமன்ற சிறைக்கூடத்தில் உள்ள மலசல கூடத்திற்குள் வைத்து குறித்த கைதி தனது கழுத்தையும், கையையும் கூரிய கத்தியால் வெட்டி உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த நிலையில் படுகாயமடைந்து உடனடியாக மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக மட்டு தலைமையக பொலிசார் இடத்துக்கு தடயவியல் பொலிஸ் பிரிவினர் அழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.