நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்! உயிரிழந்த அதிகாரிகளுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை பத்திரம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக விரைவில் அமைச்சரவை பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை அமைச்சரவை தீர்மானிக்கும் எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலையில் கைதிகள் நடத்திய வன்முறை
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் நடத்திய வன்முறைத் தாக்குதலில் சிறைச்சாலை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 10 அதிகாரிகள் உயிரிழந்தனர்.

இந்த பயங்கர மோதலின் போது மேலும் சில அதிகாரிகளும், சுமார் 100 கைதிகளும் காயமடைந்ததுடன், 21 கைதிகளும் உயிரிழந்திருந்தனர்.
இந்த மோதலில் உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, அவர்கள் வழக்கமாக ஓய்வு பெறும் வயது வரை முழுமையான மாதச் சம்பளத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பின்னர் உரிய ஓய்வூதியத்தை வழங்குவதற்கும் தேவையான ஏற்பாடுகளை சிறைச்சாலைகள் திணைக்களம் தற்போது முன்னெடுத்து வருவதாக மேல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.